என் மலர்
இந்தியா

அசாம் அருகே ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி 8 யானைகள் பலி
- தண்டவாளத்தில் யானைகள் கூட்டம் இருப்பதைக் கண்டதும், ரெயில் ஓட்டுநர் அவசரகால பிரேக்குகளைப் பயன்படுத்தினார்.
- விபத்து குறித்து வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுகாத்தி:
மிசோரம் மாநிலம் சாய்ரங்கில் இருந்து புதுடெல்லிக்கு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இன்று அதிகாலை அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து சுமார் 126 கி.மீ தொலைவில் சென்று கொண்டிருந்தது.
அப்போது தண்டவாளப் பகுதியில் யானைகள் கூட்டமாக நின்று கொண்டிருந்தன. வேகமாக வந்த ரெயில் யானைகள் மீது மோதியது. இந்த விபத்தில் 8 யானைகள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. ஒரு குட்டி யானை படுகாயம் அடைந்தது. தகவல் அறிந்த மீட்பு குழுவினர் உடனடியாக வந்து படுகாயம் அடைந்த குட்டி யானைக்கு சிகிச்சை அளித்தனர்.
மேலும் இந்த விபத்தில் சில ரெயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன. ஆனால் ரெயிலில் பயணம் செய்தவர்களுக்கு அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் ஏற்படவில்லை. விபத்து நடந்த பகுதிக்கு நிவாரண ரெயில்கள் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் விரைந்தனர். யானைகள் வழித்தடமாக குறிப்பிடப்படாத இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தண்டவாளத்தில் யானைகள் கூட்டம் இருப்பதைக் கண்டதும், ரெயில் ஓட்டுநர் அவசரகால பிரேக்குகளைப் பயன்படுத்தினார். எனினும், யானைகள் மீது மோதியதால் ரெயில் தடம் புரண்டது. ரெயில் தடம் புரண்டதாலும், யானையின் உடல் பாகங்கள் தண்டவாளங்களில் சிதறிக் கிடந்ததாலும், அசாம் மற்றும் வடகிழக்கின் பிற பகுதிகளுக்கான ரெயில் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
இந்த விபத்து குறித்து வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






