search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து ஸ்டிரைக்: ஒரு வருட இடைவெளியில் துண்டாக்கப்பட்ட இரு கட்சிகள்
    X

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து ஸ்டிரைக்: ஒரு வருட இடைவெளியில் துண்டாக்கப்பட்ட இரு கட்சிகள்

    • 40 எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு இருப்பதாக அஜித் பவார் தகவல்
    • கடந்த ஆண்டு உத்தவ் தாக்கரே கட்சி உடைக்கப்படடு ஷிண்டே முதல்வராக பதவி ஏற்றார்

    மகாராஷ்டிர மாநில அரசில் நேற்று திடீர் திருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் (சரத் பவார் அண்ணன் மகன்) 39 எம்.எல்.ஏ.க்களுடன் ஆளுங்கட்சிக்கு ஆதரவு அளித்து துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 8 எம்.எல்.ஏ.க்களும் அமைச்சராக பதவி ஏற்றனர்.

    2019-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் இருந்து மகாராஷ்டிர மாநில அரசின் நகர்வுகளை பார்த்தோம் என்றால், ஸ்திரதன்மையற்ற நிலை என்றே கூறலாம்.

    சட்டசபை தேர்தலின்போது பா.ஜனதா மற்றும் சிவசேனா கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. பா.ஜனதா 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. 288 இடங்களை கொண்ட மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க போதுமான பெரும்பான்மையை பா.ஜனதா தலைமையிலான கூட்டணி பிடித்தது.

    என்றாலும் உத்தவ் தாக்கரே தனக்கு முதலமைச்சர் பதவி வேண்டும் என அடம்பிடித்ததால் சிக்கல் நீடித்தது. இறுதியில் அஜித் பவார் துணையுடன் பா.ஜனதாவின் பட்நாவிஸ் முதல்வராக பதவி ஏற்றார். ஆனால் சர்த் பவார் அப்போது அஜித் பவாருடன் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் செல்வதை தடுத்து 60 மணி நேரத்திற்குள் பட்நாவிஸை ராஜினாமா செய்ய வைத்தார்.

    அதன்பின் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைத்தன. இந்த கூட்டணி நீண்ட நாட்கள் நீடிக்காது என்று கூறிவந்த பா.ஜனதா, எப்படியாவது இந்த ஆட்சியை கவிழ்த்துவிட திட்டமிட்டது.

    இதற்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் வாய்ப்பு கிடைத்தது. உத்தவ் தாக்கரே கட்சியில் இருந்து ஏக் நாத் ஷிண்டே பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களுடன் வெளியேறி பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தார். உத்தவ் தாக்கரேயின் கட்சி உடைந்தால் போதும் என்று நினைத்த பா.ஜனதா துணை முதல்வர் பதவியை பெற்றுக் கொண்டது.

    சரியாக ஒரு வருடம் முடிந்த நிலையில் தற்போது அடுத்த ஸ்ட்ரைக். சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைக்கப்பட்டுள்ளது.

    53 எம்.எல்.ஏ.-க்களில் 40 பேர் ஆதரவுடன் அஜித் பவார் துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளார். மேலும், தேசியவாத காங்கிரஸ் நாங்கள்தான் எனவும் தெரிவித்துள்ளார். சரத் பவார் சட்டப்போராட்டம் நடத்தினாலும் உத்தவ் தாக்கரேவுக்கு ஏற்பட்ட நிலை ஏற்படலாம்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 48 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி 41 இடங்களை பிடித்தது. தற்போது பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்று சேரும் நிலை உள்ளது. இதில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா உள்ளது.

    பா.ஜனதாவுக்கு அதிக இடங்களை பெற்றுத்தரும் ஒரு மாநிலமாக மகாராஷ்டிரா பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் கூட்டணியால் பல இடங்கள் பறிபோனால் என்னவாகும் என்பதை யோசித்த பா.ஜனதா அதற்கு பின்னால் இருந்து வேலை செய்திருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 27.84 சதவீத வாக்குகள் பெற்றிருந்தன. சிவசேனா 23.5 சதவீதம், தேசியவாத காங்கிரஸ் 15.66 சதவீதம், காங்கிரஸ் 16.41 சதவீதம். இந்த மூன்று கட்சிகளின் சதவீதம் 45-ஐ தாண்டும்.

    அதனால் கட்சிகளை துண்டு துண்டாக்கினால் வாக்குகள் பிரிந்து அது தங்களுக்கு சாதகமாகும் என கணக்கு போட்டிருக்கலாம்.

    கடந்த சில நாட்களுக்கு முன், 2019-ல் பா.ஜனதா ஆட்சியமைக்கு ஆதரவு தருவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சம்மதம் தெரிவித்தார் என பட்நாவிஸ் தெரிவித்திருந்தார். அதற்கு எந்த நேரத்தில் எந்த முடிவு எடுக்க வேண்டும். கூக்லி வீசுவதற்கான நேரம் தனக்கு தெரியும் என்று சரத் பவார் பதில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×