search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கச்சத்தீவை தாரைவார்த்தபோது தி.மு.க.வுக்கு நன்றாக தெரியும்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கச்சத்தீவை தாரைவார்த்தபோது தி.மு.க.வுக்கு நன்றாக தெரியும்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்

    • 1976-ம் ஆண்டு இரு நாடுகளின் அரசுகளுக்கும் இடையே ஏற்பட்ட மற்றொரு ஒப்பந்தத்தில் இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமை விட்டு கொடுக்கப்பட்டது.
    • கச்சத்தீவு இறையாண்மை இந்தியாவுக்கே உரியது என்று 1958-ம் ஆண்டு அன்றைய அட்டர்னி ஜெனரல் செதால்வத் கூறினார்.

    புதுடெல்லி:

    இந்திய அரசியலில் கச்சத்தீவு விவகாரம் தற்போது பூதாகரமாக கிளம்பி உள்ளது. கச்சத்தீவு கடந்த 1974-ம் ஆண்டு வரை இந்தியா வசம் இருந்தது.

    1974-ம் ஆண்டு இந்தியா, இலங்கை செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது முதலே கச்சத்தீவில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது.

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கச்சத்தீவு ஒப்படைப்பு குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதில் கிடைத்துள்ளது. இது தொடர்பான ஆவணங்களை அண்ணாமலை வெளியிட்டார்.

    இதையடுத்து பிரதமர் மோடியும் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் 'காங்கிரசை எப்போதும் நம்ப முடியாது' என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று ஒரு விளக்கம் அளித்தார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    பாராளுமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக கச்சத்தீவு விவகாரம் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகிறது. தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பலமுறை கடிதம் எழுதியுள்ளார். கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தற்போதைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நான் 21 முறை பதில் அளித்துள்ளேன்.

    கச்சத்தீவு பிரச்சனை எப்படி உருவானது என்பது மக்களுக்கு தெரிய வேண்டும். அதை பொதுமக்கள் அறிந்து கொள்ள விரும்புகிறார்கள்.

    1974-ம் ஆண்டு கச்சத்தீவு தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தில் இந்தியா, இலங்கை மீனவர்கள் மீன் பிடிக்கவும், புனித பயணத்திற்கும் அனுமதி இருந்தது. 1976-ம் ஆண்டு இரு நாடுகளின் அரசுகளுக்கும் இடையே ஏற்பட்ட மற்றொரு ஒப்பந்தத்தில் இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமை விட்டு கொடுக்கப்பட்டது.

    கச்சத்தீவு தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய அரசு தொடர்ந்து கடிதங்களை எழுதி வந்துள்ளது. பாராளுமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக கச்சத்தீவு விவகாரம் பற்றி அரசு ஆலோசித்து வந்தது.

    கச்சத்தீவுக்கு உரிமை கோரும் ஆவணங்களை ராமநாதபுரம் ராஜா வைத்திருந்தார். கச்சத்தீவு விவகாரத்தில் தங்களுக்கு பொறுப்பு இல்லை என்கிற வகையில் தி.மு.க., காங்கிரஸ் பேசுகிறது. கச்சத்தீவை தாரை வார்த்தபோது தி.மு.க.வுக்கு நன்றாக தெரியும். 'தெரியாது' என்று யாரும் சொல்ல முடியாது.

    ராணுவ பயன்பாட்டிற்கு கச்சத்தீவை பயன்படுத்த இந்தியா-இலங்கை இடையே போட்டி ஏற்பட்டது. கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறைத்தவர்களை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ளவே இந்த விளக்கம்.

    கச்சத்தீவில் மீன்பிடிக்க, வலைகளை உலர்த்த தமிழக மீனவர்களுக்கு அனுமதி உள்ளது. கடந்த 1974-ம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்திய மீனவர்களின் உரிமைகள் தொடர்பாக 1974-ம் ஆண்டில் பாராளுமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    கடந்த 1974-ம் ஆண்டில் ஒப்பந்தம் கையெழுத்தானபோது இந்திய மீனவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    கச்சத்தீவை தாரை வார்த்ததால் கடந்த 20 ஆண்டுகளில் இந்திய மீனவர்கள் 6,184 பேரை இலங்கை அரசு இதுவரை கைது செய்துள்ளது. 1,175 மீன்பிடி படகுகள் சிறை பிடிக்கப்பட்டுள்ளன.

    கச்சத்தீவு இறையாண்மை இந்தியாவுக்கே உரியது என்று 1958-ம் ஆண்டு அன்றைய அட்டர்னி ஜெனரல் செதால்வத் கூறினார். ஆனால் கச்சத்தீவை விட்டுக் கொடுப்பதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை என்று அன்றைய பிரதமர் நேரு தெரிவித்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×