search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகாவில் பிரசாரம் ஓய்ந்தது: நாளை மறுநாள் ஒரே கட்டமாக தேர்தல்

    • பிரதமர் மோடி தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை நேற்று நிறைவு செய்தார்.
    • தேர்தலுக்காக கர்நாடகத்தில் 58 ஆயிரத்து 545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    பெங்களூரு:

    224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் 2,615 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் ஆண் வேட்பாளர்கள் 2,430 பேரும், பெண் வேட்பாளர்கள் 180 பேரும், 3-ம் பாலின வேட்பாளர் ஒருவரும் போட்டியிடுகிறார்கள்.

    இதில் பா.ஜனதா சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரசில் 223 வேட்பாளர்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் 207 வேட்பாளர்களும், ஆம்ஆத்மி கட்சி சார்பில் 217 வேட்பாளர்களும் அடங்குவர்.

    சட்டசபை தேர்தலுக்காக கர்நாடகத்தில் 58 ஆயிரத்து 545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் ஓட்டுப்போட உள்ளனர். இவர்களில் 5 கோடியே 30 லட்சத்து 85 ஆயிரத்து 566 பேர் பொது வாக்காளர்கள் ஆவர். 47 ஆயிரத்து 488 பேர் அரசு ஊழியர்கள் ஆவர். வருகிற 10-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.

    சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது. கடைசி நாளான இன்று தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்தனர்.

    கர்நாடக தேர்தல் 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுவதால் பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய பிரதான கட்சிகளின் தலைவர்கள் நாடு முழுவதிலும் இருந்து கர்நாடகாவில் குவிந்துள்ளனர். பா.ஜ.க.வை பொருத்தவரை பிரதமர் மோடி 7 நாட்கள் பிரசாரம் செய்துள்ளார். தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை பிரதமர் மோடி நேற்று நிறைவு செய்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்க ளின் முதல்-மந்திரிகள், மத்திய, மாநில அமைச்சர் கள் என 100-க்கும் மேற்பட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    அடுத்தடுத்த கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருப்பதால் அக்கட்சியினர் உற்சாகமாக பிரசாரம் செய்து வருகின்றனர். கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, காங்கிர தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் ஆகியோர் தலைமையில் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பாக முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவகவுடா, முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமி, கட்சியின் மாநிலத் தலைவர் சி.எம். இப்ராகிம் ஆகியோர் இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டனர். மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே இன்று பா.ஜ.க.வை ஆதரித்து பிரசாரம் செய்தார். இருப்பார் மற்றும் கபு மற்றும் உடுப்பி நகரத்தில் அவர் வாக்குகள் சேகரித்தார். முன்னதாக அவர் ஸ்ரீ மஞ்சுநாத சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தனது சொந்த ஊரான ஹாவேரியிலும், கனகபுரா தொகுதியிலும் பிரசாரம் செய்தார். பா.ஜனதா வேட்பாளர்க ளுக்கு ஆதரவாக நடிகர் சுதீப், நடிகைகள் ஸ்ருதி, தாரா ஆகியோரும் திறந்த வாகனங்களில் சென்று வாக்கு சேகரித்தார்கள்.

    பெங்களூரு சிவாஜிநகரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் ஒரே மேடையில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்கள். அதற்கு முன்பாக பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல், பெங்களூரு புலிகேசிநகர் தொகுதிகளில் ராகுல்காந்தி பிரசாரம் செய்திருந்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் தனது சொந்த மாவட்டமான கலபுரகியில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெறற்றது. அதன்பின்பு தொகுதியில் ஓட்டுரிமை இருக்கும் தலைவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதுபோல், நட்சத்திர பேச்சாளர்கள் தொகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. நாளை மறுநாள் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. 13ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

    Next Story
    ×