என் மலர்tooltip icon

    இந்தியா

    காஷ்மீர் எல்லையோர கிராமத்தில் பதுங்கு குழிகளை தயார் செய்யும் பொதுமக்கள்
    X

    காஷ்மீர் எல்லையோர கிராமத்தில் பதுங்கு குழிகளை தயார் செய்யும் பொதுமக்கள்

    • ஜம்மு பிராந்தியத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சுமார் 8 ஆயிரம் பதுங்கு குழிகள் கட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
    • மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம்.

    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, காஷ்மீர் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் காஷ்மீர் எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதியில் நிலத்தடி பதுங்கு குழிகளை தயார் செய்து வருகின்றனர்.

    இது ஏற்கனவே இப்பகுதியில் நிலவிய நிச்சயமற்ற தன்மையை நினைவூட்டுவதாக உள்ளது. 'மோடி பதுங்கு குழிகள்' என பிரபலமாக அறியப்படும் இவற்றில் போர்வைகள் மற்றும் படுக்கைகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளன.

    எல்லைக்கு அப்பால் இருந்து (பாகிஸ்தான்) நடத்தப்படும் தாக்குதலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க, எல்லை கட்டுப்பாட்டுக்கோடு அருகே நிலத்தடியில் பதுங்கு குழிகள் கட்டப்பட்டுள்ளன. இவை மோடி பதுங்கு குழிகள் என அழைக்கப்படுகின்றன.

    பூஞ்ச் மற்றும் ரஜவுரி உள்ளிட்ட அதிக ஆபத்து உள்ள பகுதிகளில் தனிநபர் மற்றும் சமூக பதுங்கு குழிகளை கட்ட நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியை மத்திய அரசு வழங்கியது. பிரதமர் நரேந்திர மோடியின் 2-வது ஆட்சியின் போது இத்தகைய பதுங்கு குழிகள் அதிக அளவில் கட்டப்பட்டன.

    ஜம்மு பிராந்தியத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சுமார் 8 ஆயிரம் பதுங்கு குழிகள் கட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். முதல் கட்டமாக ஜம்மு, கதுவா, சம்பா, பூஞ்ச் மற்றும் ரஜவுரி ஆகிய 5 மாவட்டங்களில் 14,460 பதுங்கு குழிகளை கட்ட மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. பின்னர் ஆபத்து அதிகம் உள்ள அனைத்து பகுதிகளிலும் பதுங்கு குழிகளை கட்ட அனுமதி வழங்கப்பட்டது.

    இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த கர்மர்ஹா கூறும்போது, "சமீப காலமாக மக்கள் பதுங்கு குழிகளை மறந்துவிட்டனர். இப்போது போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் அவற்றை சுத்தம் செய்து வருகின்றனர். எனினும், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நல்லிணக்கம் ஏற்படும் என்று நம்புகிறோம்" என்றார்.

    மற்றொருவர் கூறும்போது, "மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம். பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். ராணுவத்துக்கும் ஆதரவாக இருப்போம். தேவையான உதவி செய்யவும் தயாராக உள்ளோம்" என்றார்.

    Next Story
    ×