என் மலர்
இந்தியா

பி.எஸ்.எல்.வி.சி.-62 ராக்கெட் பாதையை விட்டு விலகியது- இஸ்ரோ தலைவர் தகவல்
- விவசாயம், நகர்ப்புற திட்டமிடல், சுற்றுச்சூழல் ஆய்வு நடவடிக்கைகளுக்கு இந்த செயற்கைகோள் உதவும்.
- ஸ்பெயின் ஸ்டாா்ட்அப் நிறுவனம் உருவாக்கிய ‘கிட்’ எனப்ப டும் சிறிய விண்கலமும் அனுப்பப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்வெளியில் பல்வேறு சாதனைகளை புரிந்து உள்ளது.
இந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் பயணமாக இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட்டை ஏவியது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவன் ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் 16 செயற்கைகோளுடன் இன்று காலை விண்ணில் ஏவப்பட்டது.
பாதுகாப்புத் துறைப் பயன்பாட்டுக்கான இ.ஓ.எஸ்.-என்.1 (அன்விஷா) எனும் அதி நவீன செயற்கைகோளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறு வனம் (டி.ஆர்.டி.ஓ.) தயாரித்துள்ளது.
இந்தச் செயற்கைகோளுடன் இந்தியா மற்றும் அமெரிக்கா, சிங்கப்பூர், மொரீஷியஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சொந்தமான 15 சிறிய வணிகரீதியான செயற்கைகோளுடன் 44.4 மீட்டர் உயரம் உள்ள பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் மூலம் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 10.18 மணி அளவில் விண்ணில் ஏவப்பட்டது.
முதன்மைச் செயற்கை கோளான இ.ஓ.எஸ்.-என். 1 தரையில் இருந்து 505 கி.மீ. தொலைவு கொண்ட சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த முடிவு செய்யப்பட்டது. புவி கண்காணிப்பு மற்றும் ராணுவ பாதுகாப்புக்கான சேவைகளை அது வழங்கும். மேலும் விவசாயம், நகர்ப்புற திட்டமிடல், சுற்றுச்சூழல் ஆய்வு நடவடிக்கைகளுக்கு இந்த செயற்கைகோள் உதவும்.
மற்ற செயற்கைக்கோள்களில் ஆயுள்சாட், சென்னையைச் சோ்ந்த ஆா்பிட்எய்டு எனும் ஸ்டாா்ட் அப் நிறுவனம் தயாரித்தது. இது புவிவட்டப் பாதையில் சுற்றி வரும் செயற்கைக் கோளில் மீண்டும் எரி பொருள் நிரப்புதல் குறித்த ஆய்வை மேற்கொள்ள உள்ளது.
இதைத் தவிர, ஸ்பெயின் ஸ்டாா்ட்அப் நிறுவனம் உருவாக்கிய 'கிட்' எனப்ப டும் சிறிய விண்கலமும் அனுப்பப்பட்டது.
17 நிமிட பயணத்திற்கு பிறகு இந்த செயற்கை கோள்களை சுமார் 511 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள சூரியஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
4-வது நிலையில் நிலை நிறுத்தப்பட வேண்டும். ஆனால் 3-வது நிலையின் போது கோளாறு ஏற்பட்டு பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் திட்டமிடப்பட்ட பாதையை விட்டு விலகியது. தனது இலக்கை அடைய முடியவில்லை என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இன்று பி.எஸ்.எல்.வி. சி-62/ இ.ஓ.எஸ். - என். 1 திட்டத்தை செயல்படுத்த முயற்சித்துள்ளோம். பி.எஸ்.எல்.வி. ராக்கெட் 2 திட எரிபொருள் நிலைகள் மற்றும் 2 திரவ எரிபொருள் நிலைகளைக் கொண்ட 4 நிலை ராக்கெட் ஆகும்.
3-வது நிலையின் இறுதி வரை ராக்கெட்டின் செயல்பாடு எதிர்பார்த்த படியே இருந்தது. 3-வது நிலை முடிவடையும் தருணத்தில் ராக்கெட்டில் அதிகப்படியான அதிர்வுகளைக் கண்டோம். இதன் விளைவாக, ராக்கெட்டின் பயணப் பாதையில் ஒரு விலகல் காணப்படுகிறது. இலக்கை அடைய முடியவில்லை. நாங்கள் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து வருகிறோம். விரைவில் இது குறித்து விவாதிப்போம் என்றார்.
பி.எஸ்.எல்.வி. பயணத்தில் ஏற்பட்ட 2-வது சிக்கல் இதுவாகும். இந்த ஆண்டின் முதல் முயற்சியே தோல்வியில் முடிந்தது.






