என் மலர்tooltip icon

    இந்தியா

    ககன்யான் 2027-ம் ஆண்டு விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர்
    X

    ககன்யான் 2027-ம் ஆண்டு விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர்

    • சந்திரயான்-5 திட்டத்திற்காக ஜப்பான் விண்வெளித்துறையுடன் இஸ்ரோவும் இணைந்து செயல்படுகிறது.
    • முந்தைய சந்திரயான் திட்டத்தில் ரோவரின் எடை 25 கிலோவாக இருந்தது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), நிலம் மற்றும் கடல் ஆகிய இரண்டிலும் நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு கூடுதல் கவனம் செலுத்துகிறது. தற்போது இஸ்ரோவிடம் குறைந்தது 56 செயற்கைக்கோள்கள் உள்ளன. அவற்றில் போதுமான எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்கள் நாட்டின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படுகின்றன.

    தொலைதொடர்பு சேவை, பேரிடர் எச்சரிக்கை, வானிலை முன்னறிவிப்பு, வள மேலாண்மை, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், நீர் பாதுகாப்பு மற்றும் அனைத்து மக்களின் பாதுகாப்பு போன்ற பல துறைகள் மூலம் சாதாரண மக்களின் நலனுக்காக மேம்பட்ட விண்வெளி தொழில்நுட்பத்தை கொண்டு வருவதே இஸ்ரோவின் திட்டங்களாகும்.

    நமது நாட்டில் சுமார் 11 ஆயிரத்து 500 கி.மீ. நீளமுள்ள கடற்கரை உள்ளது. அந்தப் பகுதியிலும், எல்லைப்பகுதிகளிலும் விழிப்புடன் இருக்க வேண்டியது இருக்கிறது. எனவே, நாட்டின் பாதுகாப்புக்காக தேவையானதையும், சாத்தியமானதும் செய்யப்படுகிறது. அத்துடன், மற்ற அமைப்புகளுடன் சேர்ந்து நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு இஸ்ரோவுக்கு உள்ளது.

    இந்தியாவின் விண்வெளி ஆய்வின் ஒரு பகுதியாக, சந்திரயான்-4 திட்டம் மூலம் நிலவு மேற்பரப்பு மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வருவதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர். இதன் மூலம் நிலவு புவியியல் பற்றிய பல தகவல்களை நாம் அறிய முடியும். அத்துடன், எதிர்கால விண்வெளி பயணங்களுக்கு இந்த ஆராய்ச்சி உதவும்.

    சந்திரயான்-5 திட்டத்திற்காக ஜப்பான் விண்வெளித்துறையுடன் இஸ்ரோவும் இணைந்து செயல்படுகிறது. ஏற்கனவே விண்ணுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் பணிகளை விட தற்போது இது விரிவாக இருக்கும். சந்திரயான்-3-ன் எடை 5 ஆயிரம் கிலோவாக இருந்தது. ஆனால் சந்திரயான் 5-க்கான மொத்த ஏவுதள எடை 6 ஆயிரத்து 400 கிலோவாக உயர்ந்துள்ளது.

    முந்தைய சந்திரயான் திட்டத்தில் ரோவரின் எடை 25 கிலோவாக இருந்தது. ஆனால், தற்போது சந்திரயான்-5-ல் ரோவரின் எடை 350 கிலோ எடையுள்ளதாக இருக்கும். ஆயுட்காலம் 14 நாட்களில் இருந்து 100 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் நிலவின் மேற்பரப்பை விரிவாக ஆராய முடியும். மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதிலும் இஸ்ரோ தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் ஆள் இல்லாத ராக்கெட் நடப்பாண்டு இறுதியில் விண்ணில் ஏவி சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, வருகிற 2027-ம் ஆண்டின் முதல் காலாண்டில் மேலும் 2 பணியாளர்கள் கொண்ட பணிகள் விண்வெளி பயணிகளை ஏற்றிச்செல்லும். இதுதவிர, நாசாவுடன் இணைந்து 2 பணிகள் இருக்கும். தொடர்ந்து 2027-ம் ஆண்டு இந்தியாவின் விண்வெளி பயணத்திற்கு ஒரு முக்கியமான ஆண்டாக இருக்கும். ஏனெனில் 2027-ம் ஆண்டில் சந்திரயான்-4 மற்றும் மனிதனை விண்ணுக்கு ஏவப்படும் ககன்யான் திட்டமும் செயல்படுத்த நாடு தயாராகி வருகிறது' என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார்.

    Next Story
    ×