என் மலர்
இந்தியா

திருப்பதி கோவிலில் 7 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
- திருப்பதியில் பல இடங்களில் கியூஆர் குறியீடு ஸ்கேன் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
- கருத்தை தெரிவிக்கும் வகையில் 600 எழுத்துக்கள் வடிவில் கருத்தை பதிவு செய்யலாம்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை காரணமாக நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
இதனால் நேற்று பக்தர்கள் காத்திருப்பு அறைகள் முழுவதும் நிரம்பி வழிந்தது. மேலும் நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 7 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தரிசனத்திற்காக பல மணி நேரம் காத்திருக்கின்றனர்.
பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து இருந்தனர்.
திருப்பதியில் நேற்று 74,344 பேர் தரிசனம் செய்தனர். 32,169 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 2.50 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு ஏராளமான சேவைகள் வழங்கப்படுகின்றன.
இந்தச் சேவை குறித்தும், அவற்றின் தரத்தை உயர்த்தவும், பக்தர்களிடம் கருத்து கேட்க வாட்ஸ்அப் முறையை தேவஸ்தானம் அறிமுகம் செய்துள்ளது.
இதற்காக, திருப்பதியில் பல இடங்களில் கியூஆர் குறியீடு ஸ்கேன் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்கேனை ஓபன் செய்தால் வாட்ஸ்அப்பில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பார்வை சேகரிப்பு பக்கம் திறக்கப்படும்.
அதில் பக்தர்களின் பெயர், பிரிவு, அன்ன பிரசாதம், லட்டு பிரசாதம், அறைகள், முடி காணிக்கை வழங்கும் இடம், கியூ லைன், தரிசன அனுபவம் போன்றவை தேர்வு செய்ய வேண்டும்.
கருத்தை தெரிவிக்கும் வகையில் 600 எழுத்துக்கள் வடிவில் கருத்தை பதிவு செய்யலாம். அல்லது வீடியோ பதிவு செய்யலாம். பக்தர்களின் கருத்துக்களை தேவஸ்தானம் பரிசீலனை செய்து குறைகளை நிவர்த்தி செய்யும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.