search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரிஜ் பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் கூறும் பாலியல் குற்றச்சாட்டுகள்
    X

    பிரிஜ் பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் கூறும் பாலியல் குற்றச்சாட்டுகள்

    • பிரிஜ் பூஷன் சரண்சிங்கை கைது செய்ய 9-ந் தேதிவரை மத்திய அரசுக்கு கெடு விதிக்கப்பட்டது.
    • மல்யுத்த வீராங்கனைகளின் நிலைக்கு மோடி அரசே பொறுப்பு.

    புதுடெல்லி :

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார்கள் கூறி வருகிறார்கள்.

    இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில், டெல்லி கன்னாட்பிளேஸ் போலீஸ் நிலையத்தில் போலீசார் 2 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

    இவற்றில், 6 மல்யுத்த வீராங்கனைகள் புகாரின்பேரில் ஒரு வழக்கும், 18 வயது பூர்த்தியடையாத ஒரு மல்யுத்த வீராங்கனையின் தந்தை அளித்த புகாரின்பேரில் 'போக்சோ' சட்டப்படி ஒரு வழக்கும் பதிவு செய்துள்ளனர். 'போக்சோ' வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 7 ஆண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்கும்.

    6 மல்யுத்த வீராங்கனைகள் புகாரின்பேரில் பதிவான வழக்கில், பிரிஜ் பூஷன் சரண்சிங் செய்த பாலியல் அத்துமீறல்கள் பற்றி கூறப்பட்டுள்ளன. ஒரு வீராங்கனை கூறியிருப்பதாவது:-

    நான் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, பிரிஜ்பூஷன் தனியாக அழைத்தார். அவர் மற்ற பெண்களை தகாத முறையில் தொடுபவர் என்பதால் நான் செல்ல மறுத்தேன். ஆனால் அவர் மறுபடியும் அழைத்தார். என் டி-சர்ட்டை தூக்கிவிட்டு, தன் கையால் என் வயிற்றை தடவினார். மூச்சை பரிசோதிப்பதாக தொப்புளில் கை வைத்தார்.

    அதனால்தான், தடகள வீராங்கனைகள் அவரை தனியாக சந்திப்பதை தவிர்க்க, குழுவாக சென்று வருவதை கவனித்தேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்

    2-வது வீராங்கனை கூறியிருப்பதாவது:-

    தரையில் பாய் விரித்து நான் உடற்பயிற்சி செய்தபோது, பிரிஜ்பூஷன் அங்கு வந்து என்னை பார்த்தபடி நின்றார். திடீரென குனிந்து, என் டி-சர்ட்டை தூக்கிவிட்டு, என் நெஞ்சில் கை வைத்தார். பிறகு, மூச்சை பரிசோதிப்பதாக வயிற்றில் கை வைத்தார். தகாத முறையில் தொட்டார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்

    3-வது வீராங்கனை கூறியிருப்பதாவது:-

    ஒருமுறை குழு புகைப்படம் எடுப்பதற்காக நான் கடைசி வரிசையில் நின்றபோது, பிரிஜ்பூஷன் அங்கு வந்து என் அருகில் நின்றார். திடீரென என் பின்புறத்தில் யாரோ கை வைப்பதை உணர்ந்தேன். திரும்பி பார்த்தால், பிரிஜ் பூஷன்தான் அப்படி செய்தார்.

    நான் நகர முயன்றபோது, என் தோள்பட்டையை பிடித்துக்கொண்டார். எப்படியோ அவரது பிடியில் இருந்து விடுபட்டேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்

    4-வது வீராங்கனை கூறியிருப்பதாவது:-

    பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியின்போது, பிரிஜ் பூஷன் என்னை அழைத்து தனிப்பட்ட கேள்விகளை கேட்க தொடங்கினார். நிகழ்ச்சி முடிந்த பிறகு, புகைப்படம் எடுக்கும் சாக்கில், என் விருப்பமின்றி என்னை இழுத்தார்.

    என்னிடம் செல்போன் இல்லை என்று தப்பிக்க முயன்றேன். ஆனால் அவர், தன்னிடம் உள்ள செல்போனில் எடுக்கலாம் என்று புகைப்படம் எடுத்தார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்

    5-வது வீராங்கனை கூறியிருப்பதாவது:-

    நான் பதக்கம் வென்றிருந்த சமயத்தில், என் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது, பிசியோதெரபி நிபுணர் வந்து, தலைவர் (பிரிஜ் பூஷன்) என்னை அழைப்பதாக தெரிவித்தார். பதக்கம் வென்றதற்கு வாழ்த்து தெரிவிப்பார் என்று நினைத்து சென்றேன்.

    தன் செல்போனில் என் பெற்றோருடன் பேச வைத்தார். பிறகு அவர் அமர்ந்திருந்த படுக்கைக்கு வருமாறு அழைத்தார். திடீரென என்னை கட்டி அணைத்தார். அவரது ஆசைக்கு இணைங்கினால், எனக்கு தேவையான ஊட்டச்சத்து பொருட்களை வாங்க பணம் தருவதாக ஆசை காட்டினார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    18 வயது பூர்த்தியடையாத வீராங்கனையின் தந்தை தனது புகாரில் கூறியிருப்பதாவது:-

    பிரிஜ் பூஷன் என் மகளை வலுக்கட்டாயமாக இழுத்து பாலியல் தொல்லை கொடுத்தார். அதனால் என் மகள் பதற்றமடைந்தாள். பதக்கம் வென்றபோது, புகைப்படம் எடுக்கும் சாக்கில், அவளை இறுக பிடித்துக்கொண்டார். அப்போது, தவறான முறையில் தொட்டார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பதக்கம் வென்ற நிகழ்வுகள், மல்யுத்த கூட்டமைப்பு அலுவலகம், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடந்த நிகழ்வுகளை மல்யுத்த வீராங்கனைகள் கூறியுள்ளனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை பிரிஜ் பூஷன் சரண்சிங் மறுத்துள்ளார்.

    இதற்கிடையே, மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக அரியானா மாநிலம் குருஷேத்திராவில் விவசாயிகளின் மகாபஞ்சாயத்து நடந்தது.

    அதில், பிரிஜ் பூஷன் சரண்சிங்கை கைது செய்ய 9-ந் தேதிவரை மத்திய அரசுக்கு கெடு விதிக்கப்பட்டது. அதற்குள் கைது செய்யாவிட்டால், நாடு முழுவதும் மகாபஞ்சாயத்து நடத்தப்படும், போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று பாரதீய கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் எச்சரிக்கை விடுத்தார்

    இப்பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    25 சர்வதேச பதக்கங்களை வென்ற மகள்கள், நீதி கோரி தெருவில் போராடுகிறார்கள். 15 கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகளை சந்திக்கும் எம்.பி., பிரதமரின் அரவணைப்பில் பாதுகாப்பாக இருக்கிறார்.

    மல்யுத்த வீராங்கனைகளின் நிலைக்கு மோடி அரசே பொறுப்பு.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என்று கேட்டுள்ளார்.

    Next Story
    ×