என் மலர்tooltip icon

    இந்தியா

    குஜராத் சட்டசபை தேர்தல்- பிரதமர் மோடி இன்று பிரசாரம்
    X

    குஜராத் சட்டசபை தேர்தல்- பிரதமர் மோடி இன்று பிரசாரம்

    • மும்முனை போட்டி காரணமாக குஜராத்தில் வாக்குகள் சிதறும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.
    • குஜராத்தில் பாரதிய ஜனதா கடந்த 1995-ம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வருகிறது.

    ஆமதாபாத்:

    182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 1 மற்றும் 5-ந்தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    2024-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இத்தேர்தல் கருதப்படுகிறது. முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது.

    வருகிற 14-ந்தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். 15-ந்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. 17-ந்தேதி மனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளாகும்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து குஜராத்தில் தேர்தல் ஜூரம் தொற்றி கொண்டுள்ளது. அரசியல் கட்சிகள் அனைத்தும் வாக்காளர்களை கவரும் வகையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் சார்பில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    கடந்த தேர்தலில் குஜராத்தில் பாரதிய ஜனதாவும், காங்கிரஸ் கட்சியுமே பிரதான கட்சிகளாக களம் இறங்கியது. இதில் பாரதிய ஜனதா 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு 77 இடங்கள் கிடைத்தன.

    இம்முறை குஜராத்தில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரசுடன் ஆம் ஆத்மி கட்சியும் களம் இறங்கி உள்ளது. இதனால் அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    மும்முனை போட்டி காரணமாக குஜராத்தில் வாக்குகள் சிதறும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவருகிறார்கள். ஆனால் இம்முறையும் ஆட்சியை கைப்பற்றி விட பாரதிய ஜனதா தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளது.

    குஜராத்தில் பாரதிய ஜனதா கடந்த 1995-ம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வருகிறது. 6 முறை ஆட்சியில் அமர்ந்து தொடர்ந்து 27 ஆண்டுகள் பதவியில் இருக்கிறது. 7-வது முறையாக இந்த தேர்தலிலும் ஆட்சியை பிடிக்க வியூகம் வகுத்துள்ளது.

    இதையொட்டி பிரதமர் மோடி கடந்த சில மாதங்களாக குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

    தேர்தல் தேதி வெளியான பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக குஜராத் மாநிலத்தில் பிரசாரம் தொடங்க இருக்கிறார். நேற்று இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலையொட்டி மோடி பாரதிய ஜனதா வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

    இதன் தொடர்ச்சியாக அவர் சொந்த மாநிலமான குஜராத்திற்கு இன்று பிற்பகல் செல்கிறார்.

    அவருக்கு பாரதிய ஜனதா சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன் பின்பு அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து வல்சாத் மாவட்டம் செல்கிறார்.

    வல்சாத் மாவட்டத்தில் உள்ள கப்ரடா கிராமத்தில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசுகிறார். அதன்பிறகு தேர்தல் பிரசார பேரணியிலும் பங்கேற்கிறார்.

    இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து பாவ் நகரில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார். இதில் தந்தையை இழந்த 522 பெண்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

    பிரதமர் மோடி முதல் முறையாக இன்று பிரசாரம் தொடங்க இருப்பதை தொடர்ந்து அங்குள்ள பாரதிய ஜனதா தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் கடந்த சில மாதங்களாக குஜராத் சென்று பிரசாரம் செய்தார். காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று பிரதமர் மோடி பிரசாரம் செய்ய இருப்பதால் குஜராத் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.

    Next Story
    ×