என் மலர்
இந்தியா

பள்ளி சீருடையில் மதுவாங்கும் மாணவிகள்: சமூகம் எங்கே செல்கிறது?
- பள்ளி மாணவிகள் மாணவிகள் மதுபானம் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது.
- விற்பனையாளர் கேள்வியின்றி அவர்களுக்கு மதுபானம் வழங்கியது கேள்விகளை எழுப்பியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் பள்ளி சீருடையில் மாணவிகள் தங்கு தடையின்றி அரசு கடையில் மதுவாங்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் வழி தவறி செல்லும் அதிர்ச்சி சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதை பார்க்க முடிகிறது. சில மாணவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாவது, சிலர் மற்ற பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சம்பவங்களும் நடந்துள்ளன.
பள்ளி மாணவர்கள் தவறான வழிக்கு செல்லக்கூடாது என அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வழிப்புணர்களை ஏற்படுத்தி வருகிறது. வயது நிரம்பாதவர்கள் போதைப்பொருட்கள் வழங்கினால் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. விற்பனையாளர்களை தண்டிக்க சட்டமும் வழிவகை செய்கிறது.
இந்த நிலையில்தான், மத்திய பிரதேச மாநிலத்தில் பள்ளி சீருடையில் மாணவிகள் மதுபானம் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் மாநிலத்தின் சட்டம் மற்றும் சமூக வழிப்புணர்வு குறித்து கேள்வியை எழுப்பியுள்ளது.
மண்ட்லா மாவட்டத்தில் உள்ள நைன்பூரில் மாணவிகள் அரசு மதுபானக்கடையில் மதுபானம் வாங்குகின்றனர். இதில் என்ன அவலம் என்றால், கடைக்காரர் எந்தவித கேள்வியின்றி அவர்களுக்கு மதுபானம் வழங்கியதுதான்.
சமூக வலைத்தளங்களில் பரவியதால், உள்ளூர் அதிகாரிகள் தர்ம சங்கடத்திற்கு ஆளாகியுள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், துணை கலெக்டர், தாசில்தான், உள்ளூர் போலீசார் அந்த மதுபான கடைக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அதிகாரிகள் வீடியோவை பரிசோதனை செய்ததில், விற்பனையாளர் மதுபானம் வழங்கியது உறுதிப்படுத்தப்பட்டது. இது பொது உரிமம் நிபந்தனைகள் மீறுவதாகும். மதுபான சட்டத்தின்கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
இதுதொடர்பாக கலால்துறை விரிவான விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யும்படி துணை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த மாணவிகள் மது அருந்தினரா? அல்லது யாருக்காவது வாங்கி சென்றார்களா? என்ற கோணத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.






