search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிக்கிமில் மழை வெள்ளத்தில் சிக்கி மாயமான ராணுவ வீரர்களை தேடும் பணி தீவிரம்: 3 பேர் உடல்கள் மீட்பு
    X

    சிக்கிமில் மழை வெள்ளத்தில் சிக்கி மாயமான ராணுவ வீரர்களை தேடும் பணி தீவிரம்: 3 பேர் உடல்கள் மீட்பு

    • வடக்கு சிக்கிம் லாச்சென் பள்ளத்தாக்கு பகுதியில் இன்று அதிகாலை திடீரென்று மேக வெடிப்பு ஏற்பட்டது.
    • பலத்த மழையால் சுங் தாங் அணைக்கு திடீரென்று நீர்வரத்து அதிகமானதால் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    கங்டாக்:

    சிக்கிம் மாநிலத்தில் திடீர் மேகவெடிப்பால் ஏற்பட்ட கனமழை, வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயமானார்கள். அதன் விவரம் வருமாறு:-

    வடக்கு சிக்கிம் லாச்சென் பள்ளத்தாக்கு பகுதியில் இன்று அதிகாலை திடீரென்று மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பலத்த மழை பெய்தது.

    தொடர்ந்து இடைவிடாமல் கொட்டிய மழையால் அப்பகுதியில் வெள்ளம் ஓடியது. குறுகிய நேரத்தில் அதிகளவு மழை பெய்ததால் அங்குள்ள தீஸ்தா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    பலத்த மழையால் சுங் தாங் அணைக்கு திடீரென்று நீர்வரத்து அதிகமானதால் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    சுமார் 15 முதல் 20 அடி உயரத்திற்கு தண்ணீர் வெளியேறியது. இதனால் தீஸ்தா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓட தொடங்கியது. நேரம் செல்ல செல்ல ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.

    இதில் சிங்டாம் அருகே பர்டாங்க் பகுதியில் உள்ள ராணுவ முகாமுக்குள் திடீரென்று வெள்ளம் புகுந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

    ராணுவ முகாமில் இருந்த வீரர்களும் வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டனர். அதிகாலையில் ராணுவ வீரர்கள் தூங்கி கொண்டிருந்த நேரத்தில், திடீரென்று வெள்ளம் புகுந்ததால் சுதாரித்து கொள்வதற்குள் பலர் வெள்ளத்தில் சிக்கி கொண்டனர். சிலர் ராணுவ வாகனங்களுடன் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டனர்.

    வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயமாகி உள்ளதை ராணுவம் உறுதிப்படுத்தியது. இதுகுறித்து ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், சிக்கிமில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயமாகி உள்ளனர். வீரர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளின்போது சிங்டாமில் இருந்து மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிக்கிம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரி தெரிவித்தார். மேலும் காணாமல் போன ராணுவ வீரர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

    Next Story
    ×