search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பேஸ்புக் நேரலையின் போது உத்தவ் தாக்கரே கட்சி தலைவரின் மகன் சுட்டுக்கொலை
    X

    பேஸ்புக் நேரலையின் போது உத்தவ் தாக்கரே கட்சி தலைவரின் மகன் சுட்டுக்கொலை

    • சுட்டுக்கொலை செய்யப்பட்டவர் முன்னாள் கவுன்சிலர் ஆவார்.
    • இருவருக்கும் இடையில் முன்விரோதம் இருந்த நிலையில், சமீபத்தில் சமாதானம் ஏற்பட்டதாக தகவல்.

    மும்பையில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. வினோத் கோசல்கர். இவரது மகன் அபிஷேக். இவர் முன்னாள் கவுன்சிலர் ஆவார். இந்தநிலையில் நேற்று அபிஷேக் மும்பை தகிசர் பகுதியில் உள்ள எம்.எச்.பி. காலனி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு அலுவலகத்தில் 'பேஸ்புக்' நேரலை விவாதத்தில் சமூக ஆர்வலரான மோரிஸ் என்பவருடன் கலந்துகொண்டார்.

    நேரலை முடிந்து அவர் புறப்பட்ட சமயத்தில் மோரிஸ் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அபிசேக்கை சரமாரியாக சுட்டார். இதில் வயிறு, கழுத்து உள்பட உடலில் 3 இடங்களில் குண்டு பாய்ந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

    இதைத்தொடர்ந்து மோரிசும் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு 2 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    முன்னாள் கவுன்சிலர் அபிஷேக்கிற்கும், மோரிசுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது. சமீபத்தில் இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் மோரிஸ் தனது அலுவலகத்தில் நடைபெற்ற புடவை வழங்கும் நிகழ்ச்சிக்காக அபிஷேக்கை அழைத்து திட்டமிட்டு சுட்டுக்கொன்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சுமார் 35 நிமிடங்கள் அவர்கள் 'பேஸ்புக்' நேரலை விவாதத்தில் கலந்துகொண்டு பேசி உள்ளனர். இந்த நேரலையின்போதே இந்த கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே உத்தவ் தாக்கரே கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத், மகாராஷ்டிராவில் குண்டர் ஆட்சி. கொலையாளியை நான்கு நாட்களுக்கு முன் முதல்வர் சந்தித்தார். அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    Next Story
    ×