search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    92 வயது முதியவரின் வாக்கை சேகரிக்க வனப்பகுதியில் 18 கி.மீ. தூரம் மலையேறி சென்ற தேர்தல் அதிகாரிகள்
    X

    92 வயது முதியவரின் வாக்கை சேகரிக்க வனப்பகுதியில் 18 கி.மீ. தூரம் மலையேறி சென்ற தேர்தல் அதிகாரிகள்

    • அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது இந்த எடமலக்குடி பழங்குடியின கிராமம்.
    • முதியவர் சிவலிங்கத்தின் வாக்கை பதிவு செய்ய 3 பெண்கள் அடங்கிய 9 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு வருகிற 26-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

    தற்போது அங்கு தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக படுத்த படுக்கையாக இருந்த 92 வயது முதியவரின் வாக்கை சேகரிப்பதற்காக தேர்தல் அதிகாரிகள் வனப்பகுதிக்குள் 18 கிலோமீட்டர் தூரம் மலையேறி சென்றுள்ளனர்.

    கேரள மாநிலம் இடுக்கியில் உள்ளது எடமலக்குடி. அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது இந்த பழங்குடியின கிராமம். அந்த கிராமத்தை சேர்ந்த முதியவர் சிவலிங்கம். 92 வயதான அந்த முதியவர் வயது முதிர்வு காரணமாக வீட்டில் படுத்த படுக்கையாக இருந்து வருகிறார்.

    படுத்த படுக்கையாக இருந்தபோதிலும் தற்போது நடக்கவுள்ள மக்களவை தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துள்ளார். அவர் தனது குடும்பத்தினர் உதவியுடன் வீட்டில் இருந்தே வாக்களிக்கும் வசதிக்கு விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பத்தை மாவட்ட தேர்தல் அலுவலகம் பரிசீலித்தது.

    பின்பு முதியவரின் விண்ணப்பத்தை அங்கீகரித்தது. முதியவர் சிவலிங்கம் வாழ்ந்து வரும் பழங்குடியின கிராமத்துக்கு செல்வது மிகவும் சிரமமான ஒன்றாகும். அடர்ந்த வனப்பகுதிக்குள் மலையேறி சென்றால்தான் அந்த கிராமத்திற்கு செல்ல முடியும்.

    ஆகவே அங்கு சென்று முதியவர் சிவலிங்கத்தின் வாக்கை பதிவு செய்ய 3 பெண்கள் அடங்கிய 9 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. அவர்கள் வனப்பகுதிகள் சவால் பயணம் மேற்கொள்ள தயாராகினர். அவர்கள் மூணாறில் இருந்து தங்களது பயணத்தை தொடங்கினர். மூணாறில் இருந்து எடமலக்குடி நுழைவாயிலான பெட்டிமுடி அருகே உள்ள கேப்பாக்காடு வரை வாகனத்தில் பயணித்தனர்.

    பின்பு அங்கிருந்து வனப்பகுதியில் கரடுமுரடான பாதையில் 18 கிலோமீட்டர் தூரம் மலையேறிச் சென்றனர். காட்டு விலங்குகள் சுதந்திரமாக திரிந்த வனப்பகுதி வழியாக அவர்கள் தங்களின் பயணத்தை மேற்கொண்டனர். இறுதியில் அடர்ந்த காட்டுக்குள் பல்வேறு சிரமங்களை கடந்து எடமலக்குடி பழங்குடியின கிராமத்தை சென்றடைந்தனர்.

    அந்த கிராமத்தில் மொத்தம் 10 வீடுகளே இருந்தன. ஆனால் வீட்டுக்கு வெளியே யாரும் இல்லாமல் அமைதியாக இருந்தது. இதனால் சிவலிங்கத்தின் வீட்டை கண்டுபிடிப்பதில் தேர்தல் அதிகாரிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. பின்பு சிவலிங்கத்தின் வீட்டை கண்டுபிடித்து சென்றனர்.

    அங்கு அவர் உட்காரவோ பேசவோ முடியாத நிலையில் படுத்த படுக்கையாக இருந்தார். அவர் படுத்திருந்த இடத்திற்கு அருகிலேயே வாக்குச்சாவடி போன்று அமைக்கப்பட்டது. தான் வாக்களிக்க தன்னுடைய பேரனின் உதவி வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் அவர் கோரிக்கை வைத்தார்.

    அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து முதியவர் சிவலிங்கம் தனது பேரனின் உதவியுடன் வாக்களித்தார். தனது வாக்கை பெறுவதற்காக தேர்தல் அதிகாரிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து தனது வீட்டிற்கே வந்தது முதியவருக்கு பூரிப்பை ஏற்படுத்தியது. அவர் தேர்தல் அதிகாரிகளிடம் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக்கொண்டார்.

    இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் முதியவரின் வீட்டில் இருந்து திரும்பி வந்தனர். முதியவர் ஒருவரின் வாக்கை பெறுவதற்காக வனப்பகுதிக்குள் 18 கிலோ மீட்டர் தூரம் சென்று வந்த தேர்தல் அதிகாரிகள், தசைப்பிடிப்பு மற்றும் உடல் சோர்வு உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை சந்தித்தனர். இருந்தபோதிலும் சவாலான ஒரு பணியை முடித்ததை நினைத்து அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    முதியவர் ஒருவரின் வாக்கை பதிவு செய்வதற்காக தேர்தல் ஆணையம் எடுத்த இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

    Next Story
    ×