என் மலர்
இந்தியா

சிறுத்தைகள், கரடி நடமாட்டம்: திருப்பதி நடைபாதையில் தடுப்பு வேலி அமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்
- பக்தர்கள் சிறுத்தை மீது கற்களை வீசி கூச்சலிட்டதால் குழந்தையை விட்டுவிட்டு வனப்பகுதிக்குள் தப்பி ஓடியது.
- கரடியை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
திருப்பதி:
திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நேர்த்திக் கடனாக அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் நடந்து வருகின்றனர்.
அலிபிரியில் இருந்து திருமலைக்கு செல்லும் நடைபாதை அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. இதனால் வனப்பகுதியில் இருக்கும் யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி அலிபிரி நடைபாதைக்கு வருகின்றன.
கடந்த மாதம் பக்தர் ஒருவர் தனது 4 வயது குழந்தையுடன் நடந்து சென்றார். அப்போது திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை குழந்தையை கவ்விக்கொண்டு இழுத்துச் சென்றது.
அங்கிருந்த பக்தர்கள் சிறுத்தை மீது கற்களை வீசி கூச்சலிட்டதால் குழந்தையை விட்டுவிட்டு வனப்பகுதிக்குள் தப்பி ஓடியது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கரடி ஒன்று வனப்பகுதியில் இருந்து அலிபிரி நடைபாதைக்கு வந்தது. கரடியை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஒரு சில பக்தர்கள் கரடி நடந்து செல்வதை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். பின்னர் கரடி நடைபாதையில் இருந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
அலிபிரி நடைபாதையில் வன விலங்குகள் புகாமல் இருக்க நடைபாதை முழுவதும் இரும்பு கம்பி வேலிகள் அமைக்கப்படும் என ஏற்கனவே தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
போர்க்கால அடிப்படையில் வேலி அமைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.






