search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முலாயம் சிங் தொகுதியில் மருமகள் டிம்பிள் யாதவ் வெற்றி
    X

    முலாயம் சிங் தொகுதியில் மருமகள் டிம்பிள் யாதவ் வெற்றி

    • பீகார் மாநிலம் குர்கானி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் கேதர்பிரசாத் குப்தா வெற்றி பெற்றார்.
    • இடைத்தேர்தலில் ராம்பூர் தொகுதியை பா.ஜ.க. கைப்பற்றி உள்ளது

    புதுடெல்லி :

    குஜராத் சட்டசபை தேர்தலில் டிசம்பர் 5-ந்தேதி நடந்த 2-ம் கட்ட வாக்குப்பதிவுடன், பல்வேறு மாநிலங்களில் காலியாக இருந்த ஒரு எம்.பி. மற்றும் 6 எம்.எல்.ஏ. தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

    இந்த இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகளும் நேற்று எண்ணப்பட்டன. இதன் முடிவுகள் வருமாறு:-

    சமீபத்தில் உடல்நலக்குறைவால் சமாஜ்வாடிக்கட்சித்தலைவர் முலாயம் சிங் யாதவ் எம்.பி. மரணம் அடைந்ததால், உத்தரபிரதேச மாநிலத்தில், மெயின்புரி தொகுதி காலியானதால் அங்கு இடைத்தேர்தல் நடந்தது.

    இந்த தேர்தலில் முலாயம் சிங் யாதவின் மருமகளும், முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் ரகுராஜ் சிங் ஷாக்யா நிறுத்தப்பட்டார்.

    இந்த தொகுதியில் டிம்பிள் யாதவ் 2 லட்சத்து 88 ஆயிரத்து 461 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இதனால் அந்த தொகுதியை சமாஜ்வாடி கட்சி தக்க வைத்துக்கொண்டது.

    * உத்தரபிரதேச மாநிலம், ராம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் அசம்கான் வெறுப்புணர்வு பேச்சு வழக்கில் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவரது பதவி பறிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் இந்த தொகுதியை பா.ஜ.க. கைப்பற்றி உள்ளது. அந்தக் கட்சியின் வேட்பாளர் ஆகாஷ் சக்சேனா, தனக்கு அடுத்தபடியாக வந்த சமாஜ்வாடி கட்சியின் முகமது ஆசிம் ராஜாவை 34 ஆயிரத்து 136 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    * அதே மாநிலத்தில் கட்டாவ்லி தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. விக்ரம் சிங் முசாப்பர் நகர் கலவர வழக்கில் 2 ஆண்டு தண்டனையால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இடைத்தேர்தல் நடந்தது. இந்த தொகுதியில் மறைந்த அஜித் சிங்கின் ராஷ்டிரிய லோக்தளம் கட்சி வேட்பாளர் மதன் பய்யா வெற்றி பெற்றார். அவர் பா.ஜ.க. வேட்பாளர் ராஜ்குமாரியை 22 ஆயிரத்து 143 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    * ராஜஸ்தான் மாநிலம், சர்தார் சஹார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பன்வர்லால் சர்மா உடல்நலக்குறைவால் மரணம் அடைந்ததால், அங்கு நடந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் அனில் குமார் சர்மா வெற்றி பெற்றார். அவர் தனக்கு அடுத்தபடியாக வந்த பா.ஜ.க. வேட்பாளர் அசோக் குமாரை சுமார் 26 ஆயிரத்து 852 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

    * ஒடிசா மாநிலம், பதம்பூர் தொகுதி பிஜூஜனதாதளம் எம்.எல்.ஏ. பிஜய் ரஞ்சன் சிங் பரிஹா மரணம் அடைந்ததால், அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. பிஜூஜனதாதளம் வேட்பாளர் பார்ஷா சிங் பரிஹா வெற்றி பெற்றார். அவர் பா.ஜ.க. வேட்பாளர் பிரதீப் புரோகித்தை 42 ஆயிரத்து 679 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

    * பீகார் மாநிலம், குர்கானி தொகுதி ராஷ்டிரிய ஜனதாதளம் எம்.எல்.ஏ. அனில்குமார் சஹனி, மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் தொகுதி காலியாகி இடைத்தேர்தல் நடந்தது. அங்கு பா.ஜ.க. வேட்பாளர் கேதர்பிரசாத் குப்தா 3 ஆயிரத்து 649 வாக்குகள் வித்தியாசத்தில் ஐக்கிய ஜனதாதளம், காங்கிரஸ், ராஷ்டிர ஜனதாதளம் கூட்டணி வேட்பாளர் மனோஜ் சிங்கை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    * சத்தீஷ்கார் மாநிலம், பானுபிரதாப்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. மனோஜ் சிங் மாண்டவி மறைவால் தொகுதி காலியானதால் இடைத்தேர்தல் நடந்தது. அங்கு காங்கிரஸ் வேட்பாளர் சாவித்திரி மனோஜ் மாண்டவி, 21 ஆயிரத்து 171 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளர் பிரேமானந்த் நேத்தமை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    இடைத்தேர்தல் நடந்த 6 சட்டசபை தொகுதிகளில் பா.ஜ.க.வும், காங்கிரசும் தலா 2 தொகுதிகளிலும், ராஷ்டிரிய லோக்தளமும், பிஜூ ஜனதாதளமும் தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன.

    Next Story
    ×