என் மலர்
இந்தியா

2029 தேர்தலுக்கு முன்னதாக வடமாநிலங்களுக்கு சிந்து நதிநீர்: மத்திய அரசு மாஸ்டர் பிளான்..!
- பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சிந்து நதி நீர் சிஸ்டத்தை இந்தியா சஸ்பெண்ட் செய்தது.
- இந்தியாவுக்கான நீரை வேறு வழிகளில் பயன்படுத்த மத்திய அரசு ஆலோசனை.
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தம் 1960ஆம் ஆண்டு ஏற்பட்டது. அதனடிப்படையில் சிந்து நதி நீர் பாகிஸ்தானுக்கு பகிரப்பட்டு வந்தது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்தது. இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவியதால், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா சஸ்பெண்டு செய்துள்ளது.
இந்த நிலையில் 2029 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, சிந்து நதி நீர் அமைப்பில் (பல ஆறுகள் இணைந்தது) உள்ள ஆறுகளின் நீரை வடஇந்திய மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கென ஒரு திட்டத்தை உருவாக்க மத்திய அரசு முயற்சி செய்துள்ளது. இதற்கான ஆய்வு கூட்டம் மூத்த அமைச்சர்களிடையே நடைபெற்றுள்ளது. பீஸ் நதியை சிந்து நதியுடன் இணைப்பது தொடர்பான முழு திட்ட அறிக்கை (detailed project report) தயாரிக்கப்பட இருப்பது குறித்து குறிப்பிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பியன் நதியை 14 கி.மீ. சுரங்கம் மூலம் சிந்து நதியுடன் இணைக்க திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை தயாரிக்க எல்&டி நிறுவனத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது அடுத்த வருடத்திற்குள் தயாராகும் எனக் கூறப்படுகிறது.
சிந்து நதி நீரை 113 கி.மீ. கால்வாய் மூலம் வடமாநிலங்களுக்கு கொண்டு வருவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு தண்ணீரம், ரத்தமும் ஒன்றாக பயணிக்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டாக தெரிவித்தது. அதில் இருந்த சிந்து நதி நீரில் இந்தியாவுக்கான பகிர்வை எப்படி பயன்படுத்தலாம் என மத்திய அரசு தொடர்ந்த யோசனை செய்து வந்தது.
இந்த திட்டத்தில் 14 கி.மீ. தூரம் சுரங்கம் அமைப்பதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்ற சுரங்கம் அமைக்க மலைப்பாறைகள் குறித்த முழு ஆய்வு அவசியம். பாறைகள் பலவீனமாக இருந்தால், சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. DPR அறிக்கை பெற்ற பிறகு கட்டுமான பணி தொடங்கும் எனத் தெரிகிறது.
இந்த சுரங்கப்பாதை ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள உஜ் பல்நோக்கு திட்டத்துடன் இணைக்கப்படும், இது ராவியின் துணை நதியான உஜ் நதியிலிருந்து பீஸ் படுகைக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டமாகும்.






