search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குண்டும், குழியுமான சாலையில் துணி துவைத்த வாலிபர்
    X

    பல்லாங்குழி சாலையில் துணி துவைத்து எதிர்ப்பை பதிவு செய்த வாலிபர்.

    குண்டும், குழியுமான சாலையில் துணி துவைத்த வாலிபர்

    • மகாராஷ்டிராவில் கடந்த 2 மாதங்களாக பருவ மழை பெய்து வருகிறது.
    • நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக பல்லாங்குழி போல காட்சி தருகிறது.

    மும்பை :

    பொதுவாக மோசமான சாலைகளை கண்டித்து பொது மக்கள் பேரணி, தர்ணா, மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபடுவார்கள். சில சமயங்களில் சாலைகளில் மரக்கன்று நடும் போராட்டங்களில் கூட ஈடுபடுவார்கள்.

    ஆனால் மராட்டிய மாநிலம் சிப்லுன் பகுதியில் ஒருவர் மோசமான சாலையை கண்டித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட ருசிகர சம்பவம் நடந்து உள்ளது.

    மகாராஷ்டிராவில் கடந்த 2 மாதங்களாக பருவ மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து இடங்களிலும் சாலைகள் சேதமடைந்து உள்ளன. குறிப்பாக ரத்னகிரி மாவட்டம் சிப்லுன் பகுதியில் உள்ள மும்பை - கோவா நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக பல்லாங்குழி போல காட்சி தருகிறது.

    நேற்று முன்தினம் சிப்லுன் பகுதியில் வாலிபர் ஒருவர் ரக்சா பந்தன் கொண்டாட்டத்திற்காக டிப்-டாப்பாக கிளம்பி சகோதரி வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வாகனம் ஒன்று குண்டும், குழியுமான சாலையில் வேகமாக சென்றது. இதனால் குழியில் தேங்கியிருந்த மழை நீர் வாலிபரின் ஆடையை பதம் பார்த்தது.

    வாலிபரின் சட்டை சேறும், சகதியுமாக மாறியது. இது வாலிபருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    சகோதரி வீட்டிற்கு செல்லும் வழியில் தான் அணிந்து வந்த சட்டை, பல்லாங்குழி சாலையால் சேறும், சகதியும் ஆன ஆதங்கத்தில் அவர் அரசுக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்ய விரும்பினார். அருகே இருந்த கடைக்கு சென்று சோப்பு வாங்கி வந்தார். பின்னர் திடீரென தான் போட்டு இருந்த சட்டையை கழற்றி, சாலையில் உள்ள குழியில் தேங்கியிருந்த மழைநீரில் சோப்பு போட்டு துவைத்தார்.

    மேலும் அந்த காட்சிகளை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதவிவேற்றினர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    Next Story
    ×