என் மலர்
இந்தியா

இ-மெயில் மூலம் தமிழகத்தை சேர்ந்த பொருளாதார நிபுணர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
- தமிழக காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
- போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மிரட்டல் விடுத்தவரை கண்டுபிடிக்க தேடுதல் நடந்து வருகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய வாடிக்கையாளர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு துறையின் மின்னஞ்சல் முகவரிக்கு கடந்த 16-ந்தேதி இரவு 10.18 மணியளவில் அலெக்ஸ் பால் மேனன் என்ற ஹாட்மெயில் முகவரியிலிருந்து ஒரு தகவல் வந்தது. அதில், பயங்கரவாதி அஜ்மல் கசாப்பை தூக்கிலிட்டது சரியல்ல, ஐ.பி.எஸ். அதிகாரி பல்லன் ஏ. அருண் சவ்கு சங்கரை சட்டவிரோதமாக கைது செய்தது தவறு. எனவே, நாங்கள் வெடிகுண்டை வைக்கிறோம். விமான நிலைய கழிப்பறையிலும் அதன் குழாயிலும் ஒரு ஐஇடி குண்டு வைக்கப்பட்டுள்ளது என மிரட்டல் விடுக்கப்பட்டது. மேலும் ஒரு புதிர் விளையாட்டைப் போல, திட்டம் 'ஏ' தோல்வியடைந்தது. ஆனால் திட்டம் 'பி' என குறிப்பிடப்பட்டது.
இதையடுத்து விமான நிலைய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உடனடியாக எல்லா இடங்களிலும் சோதனை நடத்தினர். இருப்பினும், எங்கும் வெடிபொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. புரளி என்பது தெரியவந்தது. இது தொடர்பாக, விமான நிலையத்தின் முனையம்-2 மேலாளர் பி.சி. திம்மண்ணா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மிரட்டல் விடுத்தவரை கண்டுபிடிக்க தேடுதல் நடந்து வருகிறது.
கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்ட மிரட்டல் செய்தியில் தமிழ்நாட்டை சேர்ந்த பொருளாதார நிபுணர் ஜே. ஜெயரஞ்சனின் வீட்டை வெடி குண்டு வைத்து தகர்க்க போவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது குறித்து தமிழக காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே நேற்று பெங்களூரு நகரில் உள்ள 2 தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மறுபடியும் அடையாளம் தெரியாத ஒருவர் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் செய்தி அனுப்பியுள்ளார். இந்த விஷயம் குறித்து அறிந்ததும் போலீசார் 2 பள்ளிகளிலும் ஆய்வு செய்தனர். இருப்பினும், வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பாக புலிகேசிநகர் மற்றும் கோவிந்த்பூர் போலீஸ் நிலையங்களில் தனித்தனியே வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.






