search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெங்களூரு குண்டுவெடிப்பு: கேமராவில் சிக்கிய வாலிபர் முகத்தை அடையாளம் காணும் பணி தீவிரம்
    X

    பெங்களூரு குண்டுவெடிப்பு: கேமராவில் சிக்கிய வாலிபர் முகத்தை அடையாளம் காணும் பணி தீவிரம்

    • முதல் குண்டு வெடித்த அடுத்த 10 நிமிடங்களில் மீண்டும் 2-வது குண்டும் வெடித்தது.
    • ஓட்டலில் குண்டு வைத்த வாலிபரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட் பீல்டு அருகே உள்ள குந்தலஹள்ளியில் இயங்கிவரும் பிரபல ஓட்டல் ராமேஸ்வரம் கபேவில் நேற்று மதியம் 1 மணி அளவில் 250-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஓட்டலுக்குள்ளும், வெளியேயும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெடிகுண்டு வெடித்தது. சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். முதல் குண்டு வெடித்த அடுத்த 10 நிமிடங்களில் மீண்டும் 2-வது குண்டும் வெடித்தது. இதில் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    சம்பவம் பற்றி தெரியவந்ததும் போலீசார், மத்திய குற்றப்பிரிவு போலீசார், தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் குண்டுவெடிப்பில் காயமடைந்த 10 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் வேறு குண்டுகள் ஏதாவது இருக்கிறதா? என்றும் சோதனை நடத்தினர். ஓட்டலில் வெடித்த குண்டு ஐ.இ.டி வகை வெடிகுண்டு என்றும் வீரியம் குறைவான வெடிகுண்டு என்றும் தெரியவந்தது.

    குண்டு வெடித்த இடத்திலிருந்து ஒரு டைமர் கருவி, நட்டுகள், போல்டுகள், டிபன் பாக்ஸின் உடைந்த துண்டுகள் மற்றும் ஒரு பை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் தொழில் போட்டி காரணமாக யாராவது குண்டு வைத்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். ஆனால் அந்த ஓட்டலின் நிர்வாக இயக்குனர் திவ்யா கூறும்போது:-

    தொழில்போட்டியில் வாடிக்கையாளர்களை குறிவைத்து குண்டு வைக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். எனவே பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தீவிரவாத அமைப்புகள் யாராவது குண்டு வைத்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் இதுவரை இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்புகளும் பொறுப்பு ஏற்கவில்லை.

    எனவே ஓட்டலில் குண்டு வைத்தது யார் என்று போலீசார் துப்பு துலக்கினர். அப்போது ஓட்டலில் பொருத்தப்பட்டிருந்து கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தலையில் தொப்பி அணிந்துகொண்டு முககவசம் அணிந்தபடி குண்டுவெடிப்பு நடந்த ஓட்டல் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து இறங்கி காலை 11.30 மணியளவில் ஓட்டலுக்கு நடந்து வரும் காட்சிகளும், பின்னர் அந்த நபர் கேஷ் கவுண்டரில் பணம் செலுத்தி ஒரு தட்டில் ரவா இட்லியை வாங்கி கொண்டு காலை 11.45 மணியளவில் அவர் குப்பை தொட்டி அருகே ஒரு பையை வைத்துவிட்டு மீண்டும் பஸ்சில் புறப்பட்ட காட்சிகளும் பதிவாகி இருந்தது. அவர் சென்ற பின்புதான் அந்த பையில் இருந்த 2 வெடிகுண்டுகள் வெடித்தது இந்த காட்சிகளும் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. எனவே இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு அவர்தான் காரணம் என்பது உறுதியானது. கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் எப்படியும் கேமரா மூலம் சிக்கிவிடுவோம் என்று தெரிந்தும் அந்த நபர் மிகவும் தைரியமாக வெடிகுண்டுகளை வைத்து வெடிக்க செய்துள்ளார்.

    இதற்கிடையே சி.சி.டி.வி. கேமராவில் பதிவான வாலிபரை ஏ.ஐ. தொழில் நுட்பம் (ஆர்டிபிசியல் இன்டிலிஜன்ட்) மூலம் கண்டு பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவரது முக அம்சங்கள் சிசிடிவி மூலம் கைப்பற்றப்பட்டு அவரது முகத்தை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறினார். மேலும் ஓட்டலில் குண்டு வைத்த வாலிபரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் ஓரிரு நாட்களில் அவரை கைது செய்து விடுவோம் என்றும் தெரிவித்தார்.

    குண்டு வெடிப்பில் காயம் அடைந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, கர்நாடக கவர்னர் தாவர்சந்த கெலாட் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர். மேலும் குண்டு வெடித்த இடத்தையும் பார்வையிட்டனர். மேலும் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறும்போது, விதான் சவுதாவில் பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்ட சம்பவத்தை மாநில அரசு முன்னரே தீவிரமாக எடுத்துக்கொண்டிருந்தால் இதுபோன்ற சம்பவத்தை தவிர்த்து இருக்கலாம் என்று தெரிவித்தார். மேலும் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.

    Next Story
    ×