என் மலர்
இந்தியா

எரிமலை வெடிப்பு எதிரொலி: சாம்பல் புகை இந்திய பகுதியில் இருந்து இன்று இரவு முழுமையாக விலகும் எனத் தகவல்
- எத்தியோப்பியால் 12 ஆயிரம் வருடத்திற்குப் பிறகு எரிமலை வெடித்து சிதறியது.
- பல கி.மீ. உயரத்திற்கு சாம்பல் புகை சூழ்ந்ததால் விமான போக்குவரத்து பாதிப்பு.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஒரு எரிமலை 12,000 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக வெடித்துள்ளது. தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து 500 மைல் தொலைவில் அமைந்துள்ள ஹைலே குப்பி எரிமலை ஞாயிற்றுக்கிழமை குமுறிக் கொண்டிருந்த நிலையில், நேற்று வெடித்துள்ளது.
இதனால் எரிமலையில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்திற்கு சாம்பல் நிறைந்த கரும்புகை வெளியேறி வருகிறது. எரிமலையிலிருந்து சாம்பல் மேகங்கள் இந்தியா, ஏமன், ஓமன் மற்றும் வடக்கு பாகிஸ்தான் நோக்கி நகர்ந்து வந்தது. தற்போது டெல்லி வான்பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளது.
இந்த கரும்புகை டெல்லியில் இருந்து சீனாவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும், இன்று இரவு 7.30 மணிக்குள் முழுமையாக டெல்லியில் இருந்து விலகிச் செல்லும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எரிமலையின் சாம்பல் புகை செங்கடல், அரேபிய தீபகற்பம் ஆகியவற்றை தாண்டி இந்திய துணைக் கண்டத்தை அடைந்துள்ளது.
ஏற்கனவே காற்று மாசு காரணமாக டெல்லி பாதிப்படைந்து வந்த நிலையில், தற்போது இந்த மேகமும் சேர்ந்த மோசமாக்கியுள்ளது. ஆனால், கடல் மட்டத்தில் இருந்து வெகு தொலைவில் சூழ்ந்துள்ளதால், மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை எனக் கூறப்படுகிறது.
குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா மாநிலத்திலும் இந்த புகை சூழ்ந்து காணப்பட்டது.
முன்னெச்சரிக்கை காரணமாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டன.






