search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மீண்டும் தலைதூக்கும் சீக்கிய பயங்கரவாதம்: பஞ்சாபில் அடுத்த பிந்தரன்வாலேவாக உருவெடுத்து வரும் அம்ரித்பால் சிங்
    X

    மீண்டும் தலைதூக்கும் சீக்கிய பயங்கரவாதம்: பஞ்சாபில் அடுத்த பிந்தரன்வாலேவாக உருவெடுத்து வரும் அம்ரித்பால் சிங்

    • நீண்டகாலமாக அணைந்திருந்த சீக்கிய பயங்கரவாதம், தற்போது மீண்டும் தலைகாட்ட தொடங்கி உள்ளது.
    • அம்ரித்பால் சிங் சர்ச்சை பேச்சுகளுக்கு புகழ் பெற்றவர்.
    • சமீபத்தில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

    அமிர்தசரஸ் :

    பஞ்சாபில் சீக்கியர்களுக்கு காலிஸ்தான் என்ற தனிநாடு கோரி வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டவர், பிந்தரன்வாலே. கடந்த 1982-ம் ஆண்டு தனது ஆதரவாளர்களுடன் பொற்கோவில் வளாகத்துக்குள் புகுந்து, அதை தனது தலைமையகமாக மாற்றிக் கொண்டார்.

    அங்கிருந்தபடி இணை அரசாங்கம் நடத்த தொடங்கினார். அவரை வெளியேற்ற இந்திய ராணுவம் 1984-ம் ஆண்டு ஜூன் மாதம் 'ஆபரேஷன் புளூஸ்டார்' நடவடிக்கையை தொடங்கியது. அதில், பிந்தரன்வாலே உள்பட ஏராளமானோர் பலியானார்கள்.

    அதைத்தொடர்ந்து, நீண்டகாலமாக அணைந்திருந்த சீக்கிய பயங்கரவாதம், தற்போது அம்ரித்பால் சிங் என்பவர் மூலம் மீண்டும் தலைகாட்ட தொடங்கி உள்ளது.

    29 வயதான அம்ரித்பால் சிங், அமிர்தசரஸ் மாவட்டத்தில் ஜல்லுபுர் கேரா கிராமத்தில் பிறந்தவர். துபாயில் இருந்த அவர் அங்கிருந்து திரும்பினார். முதலில், தனது குடும்பத்துக்கு சொந்தமான போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

    பிறகு அவரை 'வாரிஸ் பஞ்சாப் தே' என்ற அமைப்பின் தலைவராக முடிசூட்டினர். இந்த அமைப்பு, கடந்த ஆண்டு சாலை விபத்தில் மறைந்த நடிகர் தீப் சித்துவால் தொடங்கப்பட்டது ஆகும். பிந்தரன்வாலே பிறந்த ஊரான மொகா மாவட்டம் ரோட் கிராமத்தில் முடிசூட்டு விழா நடந்தது. இம்மாத தொடக்கத்தில் அம்ரித்பால் சிங்குக்கு சொந்த கிராமத்தில் திருமணம் நடந்தது. இங்கிலாந்தில் வசித்து வரும் வெளிநாட்டுவாழ் இந்திய பெண் கிரந்தீப் கவுரை மணந்தார்.

    அம்ரித்பால் சிங், மத போதகர் என்ற அவதாரத்துடன் வலம் வருகிறார். தன்னை பிந்தரன்வாலே ஆதரவாளர் என்றும், காலிஸ்தான் ஆதரவாளர் என்றும் கூறிக் கொள்கிறார். பிந்தரன்வாலே போலவே, ஆயுதம் தாங்கிய ஆதரவாளர்கள் புடைசூழ நடமாடுகிறார். அதனால் அவரை ஆதரவாளர்கள் 'பிந்தரன்வாலே-2' என்று அழைக்கிறார்கள்.

    அம்ரித்பால் சிங் சர்ச்சை பேச்சுகளுக்கு புகழ் பெற்றவர். சமீபத்தில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். ''இந்திராகாந்திக்கு ஏற்பட்ட கதிதான், அமித்ஷாவுக்கும் ஏற்படும்'' என்று அவர் கூறினார்.

    பஞ்சாப் மாநிலம் ரூப்நகர் மாவட்டம் சாம்கவுர் சாகிப்பை சேர்ந்த பரிந்தர்சிங் என்பவரை கடத்திச் சென்று அடித்து உதைத்ததாக அம்ரித்பால் சிங் உள்பட 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. அவர்களில் ஒருவரான லவ்பிரீத்சிங் என்ற டூபான் என்பவரை அமிர்தசரஸ் அருகே உள்ள அஜ்னாலா போலீசார் கைது செய்தனர். அஜ்னாலா போலீஸ் நிலையத்தில் லவ்பிரீத்சிங் வைக்கப்பட்டு இருந்தார்.

    நேற்று முன்தினம் அவரை மீட்பதற்காக, அம்ரித்பால் சிங் தன் ஆதரவாளர்களுடன் போலீசாரின் தடைகளை தாண்டி போலீஸ் நிலையத்தை அடைந்தார். வாள், துப்பாக்கிகளுடன் ஆதரவாளர்கள், போலீசாருடன் மோதினர். அதில் 3 போலீசார் காயமடைந்தனர். போலீஸ் நிலையமே போர்க்களமாக காட்சியளித்தது.

    24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கோர்ட்டு மூலமாக லவ்பிரீத்சிங்கை விடுவிப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதன்பிறகு, அம்ரித்பால் சிங் தனது ஆதரவாளர்களுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    அதுபோலவே, அஜ்னாலாவில் உள்ள கோர்ட்டு, லவ்பிரீத்சிங்கை விடுவிக்குமாறு நேற்று உத்தரவிட்டது. தற்போது, அஜ்னாலா பகுதியில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×