என் மலர்
இந்தியா

காங்கிரஸ் நாட்டை துண்டாடிவிட்டது- உள்துறை அமைச்சர் அமித் ஷா கடும் தாக்கு
- பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, இன்று பிரிவினை கொடுமைகள் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
- பிரிவினையால் ஏற்பட்ட துன்பம் மறக்க முடியாதது.
புதுடெல்லி:
இந்தியாவின் 79-வது சுதந்திரதினம் நாளை (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக கொண்டாப்பட உள்ளது. டெல்லியில் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு இன்று இரவு 7 மணியளவில் உரையாற்ற உள்ளார். அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் சேனல்களில் அவரது உரை ஒலி-ஒளிபரப்பு செய்யப்படும்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டு வருகிறார்கள். இதற்கிடையே இன்று (வியாழக்கிழமை) பிரிவினை கொடுமைகள் நினைவுதினம் கடைபிடிக்கப்படுகிறது.
1947-ம் ஆண்டு இதே நாளில்தான் இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் தனியாக பிரிந்து சென்றது. அந்த பிரிவினையின்போது, நடந்த கொடூரங்களை நினைவுப்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 14-ந்தேதி நினைவு தினம் கடைபிடிப்பதை மத்திய அரசு கடந்த 2021-ம் ஆண்டு முதல் கடைபிடித்து வருகிறது.
பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, இன்று பிரிவினை கொடுமைகள் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி மத்திய உள் துறை மந்திரி அமித்ஷா தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் ஒருபதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இந்தியா பிரிக்கப்பட்டது மிகப்பெரிய கொடூரம் ஆகும். அதன் காரணமாக மிகப்பெரிய வன்முறை நிகழ்ந்தது. லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தனர். இதற்கெல்லாம் காரணம் காங்கிரஸ்தான்.
அன்றைய தினம் காங்கிரஸ் நாட்டை பல துண்டுகளாக துண்டாக்கிவிட்டது. அன்னை இந்தியாவின் மகிழ்மையை காங்கிரஸ் கட்சி காயப்படுத்திய தினம் ஆகும்.
இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியர்கள் இந்த வரலாற்றுக் கொடூரத்தை ஒரு நாளும் மறக்கமாட்டார்கள். பிரிவினையால் ஏற்பட்ட துன்பம் மறக்க முடியாதது.
இவ்வாறு அமித்ஷா அந்த பதிவில் கூறியுள்ளார்.






