search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அதானி நிறுவன விவகாரம்: டெல்லியில் 16 எதிர்க்கட்சிகள் கூடி ஆலோசனை
    X

    மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தியபோது எடுத்த படம்.

    அதானி நிறுவன விவகாரம்: டெல்லியில் 16 எதிர்க்கட்சிகள் கூடி ஆலோசனை

    • அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு சுமார் ரூ.8.22 லட்சம் கோடி அளவுக்கு சரிந்தது.
    • அதானி விவகாரத்தில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும்.

    புதுடெல்லி :

    அதானியின் நிறுவனங்கள் பங்குகள் விவகாரத்தில் பெரும் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை, தொடர்ந்து பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு சுமார் ரூ.8.22 லட்சம் கோடி அளவுக்கு சரிந்தது.

    பொதுமக்களின் முதலீடுகள் பெருமளவில் உள்ள எல்.ஐ.சி., பாரத ஸ்டேட் வங்கி போன்ற பொதுத்துறை நிறுவனங்கள், அதானியின் நிறுவனங்களில் முதலீடுகள் செய்துள்ளதால், இது மக்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் உடனே விவாதிக்க வேண்டும், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நேற்று முன்தினம் கோரின. அரசு ஏற்காத நிலையில், இரு அவைகளும் முடங்கின.

    இந்த நிலையில், டெல்லியில் பாராளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயின் அறையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, ஆம்ஆத்மி, பாரத ராஷ்டிர சமிதி, சிவசேனா, ராஷ்டிரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாடு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ் (ஜோஸ் மணி), கேரள காங்கிரஸ் (தாமஸ்), புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி என 16 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதானி நிறுவன விவகாரத்தில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த மறுப்பதால், அடுத்தகட்ட நடவடிக்கையாக என்ன செய்வது என்பது பற்றி விவாதித்தனர்.

    முடிவில் இந்த கூட்டத்தில் அதானி விவகாரத்தில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும். அதற்கு மத்திய அரசு அனுமதிக்காவிட்டால் இரு அவைகளுக்குள்ளும் போராட்டம் நடத்துவது என்று தீர்மானித்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, "பிரதமர் வற்புறுத்தலின் பேரில் அதானி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதால், சுதந்திரமான விசாரணைதான் எல்.ஐ.சி., பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பிற நிறுவனங்களைக் காப்பாற்றும். இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை" என தெரிவித்தார்.

    Next Story
    ×