என் மலர்
இந்தியா

"வெற்றிபெற என்ன வேண்டும் என்றாலும் செய்" எனப் பேசிய மணிஷ் சிசோடியா: ஆம் ஆத்மி சொல்வது என்ன?
- ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் ஆட்சி செய்து வருகிறது.
- 2027 பஞ்சாப் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மணிஷ் சிசோடியா பேசிய வீடியோ வைரல் ஆனது.
கெஜ்ரிவாலால் தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் முதன்முறையாக ஆட்சியை பிடித்தது. மூன்று முறை ஆட்சி அமைத்த நிலையில், இந்த வருடம் தொடக்கத்தில் நடைபெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தது.
தற்போது பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் ஆட்சி செய்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் 2027-ல் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி தீவிரம் காட்டுகிறது.
இதற்கிடையே ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மணிஷ் சிசோடியா, பெண்கள் பிரிவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது வெற்றிக்கான என்ன வேண்டுமென்றாலும் செய் எனப் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வரும் நிலையில், இது அவருடைய தனிப்பட்ட கருத்து. இது கட்சியின் சித்தாந்தம் அல்ல. கட்சிக்கும் அவருடைய கருத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சி தலைவர் அமன் அரோரா கூறுகையில் "மணிஷ் சிசோடியாவின் கருத்து கட்சியின் சித்தாந்தத்தை பிரதிபலிக்காது. முதல்வர் பகவத் மான் சிங் தலைமையின் கீழ் நாங்கள் மக்களுக்கு செய்த சேவை அடிப்படையில் இரு கைக்கூப்பி மக்களிடம் வாக்கு கேட்போம்" என்றார்.
மேலும், எந்த ஒரு தனிநபரும் முழுமையான கட்சி அல்ல. நானும் அதில் ஒரு சிறிய பகுதி மட்டுமே. நான் ஆம் ஆத்மி கட்சி அல்ல. மணிஷ் சிசோடியா பேசியது அரவிந்த் கெஜ்ரிவாலின் சித்தாந்தமோ அல்லது கட்சியின் சித்தாந்தமோ அல்ல, ஒருவேளை மணிஷ் சிசோடியாவின் சித்தாந்தமும் அல்ல என்றார்.






