என் மலர்
இந்தியா

போர் நடந்தபோது மலர்ந்த காதல்... உக்ரைன் நாட்டு பெண்ணை திருமணம் செய்த கேரள வாலிபர்
- பணிபுரிந்த பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் சிக்கிக்கொண்டனர்.
- யூலியாவின் குடும்பத்தினர் போலந்திலேயே குடியேறினர்.
திருவனந்தபுரம்:
ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கிடையே கடந்த 2014-ம் ஆண்டு முதல் போர் நடந்து வருகிறது. இரு நாடுகளும் பல்வேறு விதமான தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த போரில் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, அங்கு பணிபுரிந்த பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் சிக்கிக்கொண்டனர்.
அந்த போர் சூழலுக்கு மத்தியில் கேரள வாலிபர் ஒருவருக்கு, உக்ரைன் நாட்டு பெண்ணுடன் காதல் மலர்ந்தது. அந்த காதல் தற்போது திருமணத்தில் முடிந்திருக்கிறது. ஏவுகணைகள் மற்றும் வெடி குண்டுகளை தோற்கடித்து வெற்றிபெற்ற கேரள வாலிபர் பற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலை எஸ்.என்.புரம் மங்களசேரி பகுதியை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. ஆங்கில ஆசிரியரான இவர், கடந்த 2021-ம் அண்டு கியேவில் ஒரு ஆன்லைன் தளத்தில் ஆங்கிலம் கற்பிக்கும் போது, உக்ரைன் நாட்டை சேர்ந்த யூலியா கிளிச் என்பவரை சந்தித்தார்.
இந்த சந்திப்பு அவர்களுக்கிடையே நட்பை ஏற்படுத்தியது. அது நாளைடைவில் காதலாக மாறியது. இதையடுத்து யூலியாவை நேரில் சந்திப்பதற்காக விநாயகமூர்த்தி உக்ரைனுக்கு சென்றார். அங்குள்ள ஒரு பள்ளியில் அவருக்கு ஆசிரியர் வேலை கிடைத்தது.
அங்கு வேலை பார்த்து வந்த நிலையில் விநாயகமூர்த்தி மற்றும் யுலியா ஆகியே இருவரும் காதலித்து வந்தனர். அந்த நேரத்தில் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போரை தொடங்கியிருந்தது. போர் நடந்துவந்த நிலையில் இருவரும் காதலித்தனர்.
அப்போது ஒரு நாள் யூலியாவின் குடும்பத்தினருடன் விநாயகமூர்த்தி இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவர்களது வீட்டின் அருகாமையில் உள்ள விமான நிலையத்தில் ரஷ்யா குண்டுவீச்சு நடத்தியது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து வெளியேறி தொலை தூர கிராமத்துக்கு சென்று விட்டனர்.
பின்பு சில நாட்களில் அங்குள்ள அணுமின் நிலையத்தை ரஷ்யா வெடிக்கச் செய்யபோகிறது எனற வதந்தி பரவியது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து போலந்துக்கு சென்றுவிட்டனர். பின்பு தொடர்ந்து பல இன்னல்களை சந்தித்தபடி இருந்ததால் விநாயகமூர்த்தி கேரளாவுக்கு திரும்பினார்.
யூலியாவின் குடும்பத்தினர் போலந்திலேயே குடியேறினர். மேலும் யூலியாவுக்கு ஜெர்மனியில் ஆசிரியராக வேலைக்கு சென்றார். அவர்கள் வெவ்வேறு நாடுகளில் இருந்துவந்தபோதிலும், தீவிரமாக காதலித்து வந்தனர். இந்தநிலையில் விநாயகமூர்த்தியை பார்க்க கேரளா வந்த யூலியா, ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் ஜெர்மனி திரும்பினார்.
இதற்கிடையே விநாயகமூர்த்திக்கு உஸ்பெகிஸ்தானில் ஆசிரியர் வேலை கிடைத்தது. யூலியாவும், விநாயகமூர்த்தியும் திருமணம் செய்து கொள்ள 2024-ம் ஆண்டு முடிவு செய்தனர். ஆனால் அதற்கு பல சட்டச்சிக்கல்கள் இருந்தன. அந்த சிக்கல்கள் சரியானதையடுத்து தற்போது இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.
இதற்காக யூலியா தனது தந்தையுடன் சில நாட்களுக்கு முன்பு கேரளா சேர்த்தலைக்கு வந்தார். அங்குள்ள சக்தீஸ்வரர் கோவிலில் இருவருக்கும் திருமணம் நடந்தது. அவர்கள் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். போர் சூழல், சட்டச்சிக்கல்கள் என பல தடைகளை தாண்டி விநாயகமூர்த்தியை யூலியா கரம் பிடித்துள்ளார்.
யூலியா வருகிற 23-ந்தேதி ஜெர்மனிக்கு திரும்புகிறார். அவரைத் தொடர்ந்து விநாயகமூர்ததி உஸ்பெகிஸ்தானுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.






