என் மலர்
இந்தியா

ராஜேந்திர துக்காராம் சவான், விவசாயிக்கு ரூ.2-க்கு வழங்கப்பட்ட காசோலை.
சோலாப்பூர் மார்க்கெட்டில் 500 கிலோ வெங்காயத்தை விற்றதில் விவசாயிக்கு கிடைத்தது 2 ரூபாய்
- அந்த பணமும் 15 நாட்களுக்கு பிறகு எடுக்கும்படி காசோலையாக வழங்கப்பட்டுள்ளது.
- விலை குறையும் போது அரசு எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
மும்பை :
சோலாப்பூர் மாவட்டம் பார்ஷி தாலுகா போர்காவ் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திர துக்காராம் சவான்(வயது58). இவர் தனது விளைநிலத்தில் விளைந்த 512 கிலோ வெங்காயத்தை, விற்க வீட்டில் இருந்து சுமார் 70 கி.மீ. தூரத்தில் உள்ள சோலாப்பூர் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றார்.
துரதிருஷ்டவமாக இவர் சென்றபோது மார்க்கெட்டில் வெங்காய விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து இருந்தது. 70 கி.மீ. தூரம் வந்ததற்கு பயண செலவுக்காவது ஏதாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயி அவரது வெங்காயத்தை ஏலத்துக்கு அனுப்பினார். அப்போது, அவரது வெங்காயம் கிலோ ரூ.1-க்கு மட்டுமே ஏலம் போனது. இதன் மூலம் ரூ.512-க்கு விற்பனையானது.
ஆனால் சுமை கூலி, போக்குவரத்து கட்டணம், எடைப்போட கூலி போன்றவை எல்லாம் கழித்து விவசாயிக்கு 2 ரூபாய் 49 பைசா மட்டுமே கிடைத்தது. அந்த பணமும் 15 நாட்களுக்கு பிறகு எடுக்கும்படி காசோலையாக வழங்கப்பட்டுள்ளது.
இதனால் அவர் வேதனையுடன் புலம்பிக்கொண்டே வீடு திரும்பினார். இதுகுறித்து விவசாயி ராஜேந்திர துக்காராம் சவான் கூறுகையில், "நான் தரமான வெங்காயத்தை தான் கொண்டு சென்றேன். ஆனால் வியாபாரி தரம் இல்லாத வெங்காயம் என்று கூறுகிறார். இப்படி வருமானம் கிடைத்தால் நாங்கள் எப்படி பிழைப்பது?. இதுபோன்று அடிமாட்டு விலை கிடைப்பது என்னையும், வெங்காய விவசாயிகளையும் அவமதிப்பதாக உள்ளது. விலை குறையும் போது அரசு எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்" என்றார்.






