search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கோழிக்கோடு கடற்கரையில் நீல திமிங்கலம் கரை ஒதுங்கியது

    • கரை ஒதுங்கியுள்ள நீல திமிங்கலம், அழுகும் நிலையில் இருப்பதால், இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கலாம்.
    • மீனவர்களின் குழந்தைகள், திமிங்கலத்தை ஆர்வத்துடன் தொட்டுப் பார்த்தனர்.

    திருவனந்தபுரம்:

    பூமியில் உள்ள மிகப்பெரிய விலங்குகளில் ஒன்று நீல திமிங்கலம். இந்த இனம் அழிந்து வரும் உயிரினமாக கருதப்படுகின்றன. எனவே இதனை காக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோடு கடற்கரையில் ஒரு நீல திமிங்கலம் நேற்று கரை ஒதுங்கி உள்ளது. சுமார் 50 அடி நீளம் கொண்ட இந்த நீல திமிங்கலம் கரை ஒதுங்கிய தகவல் கிடைத்ததும் அந்தப் பகுதி மீனவர்கள் வந்து ஆச்சரியத்துடன் பார்த்தனர். மீனவர்களின் குழந்தைகள், திமிங்கலத்தை ஆர்வத்துடன் தொட்டுப் பார்த்தனர்.

    சமீப காலங்களில் கோழிக்கோடு கடற்கரையில் இவ்வளவு பெரிய திமிங்கலம் கரை ஒதுங்கியதில்லை என மீனவர்கள் தெரிவித்தனர். தற்போது கரை ஒதுங்கியுள்ள நீல திமிங்கலம், அழுகும் நிலையில் இருப்பதால், இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என மீனவர் ஒருவர் தெரிவித்தார்.

    இது பற்றிய தகவல் கிடைத்ததும் கோழிக்கோடு மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் மற்றும் பலர் அங்கு விரைந்து வந்தனர். நீல திமிங்கலம் இறந்தது எப்படி? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து அங்கேயே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு, அதன்பிறகு ராட்சத குழி தோண்டி புதைப்பது என அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    அதே நேரம் திமிங்கலத்தின் உடல் மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான தேசிய நிறுவனத்திற்கு மேலதிக பரிசோதனைக்கு அனுப்பப்பட உள்ளது. அதன்பிறகே திமிங்கலம் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்று சுகாதார அதிகாரி தெரிவித்தார்.

    Next Story
    ×