search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தங்கப் புதையலை சென்னையில் விற்று உல்லாசமாக வாழ்ந்த 3 பேர் கைது- 499 தங்க நாணயங்கள், ரூ.14 லட்சம் பறிமுதல்
    X

    தங்கப் புதையலை சென்னையில் விற்று உல்லாசமாக வாழ்ந்த 3 பேர் கைது- 499 தங்க நாணயங்கள், ரூ.14 லட்சம் பறிமுதல்

    • ஒரு பெரிய பாறைக்கு அடியில் பித்தளை சொம்பு ஒன்று கிடைத்தது.
    • புதையல் மூலம் கிடைத்த பணத்தில் தனக்கு பங்கு கிடைக்காததால் வருண் ஆத்திரம் அடைந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சித்தே பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் அஜித், அமரன், வருண் இவர்கள் கடந்த மே மாதம் அதே கிராமத்தில் உள்ள மலை பகுதியில் தேன் எடுக்க சென்றனர்.

    அவர்களுடன் அதே ஊரை சேர்ந்த சுப்பிர மணியம், வெங்கடேஸ்வரன் ஆகியோரும் சென்றனர்.

    அங்குள்ள கம்மா கோவில் அருகே பாறைகளில் தேன்கூடு உள்ளதா என தேடி பார்த்தனர். அப்போது ஒரு பெரிய பாறைக்கு அடியில் பித்தளை சொம்பு ஒன்று கிடைத்தது.

    அதை உடைத்த போது அதில் மண் கலந்த தங்க காசுகள் இருந்தன. அதனை கண்டதும் அவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். சொம்பில் இருந்தது தங்கப் புதையல் என்பதை அவர்கள் ஊர்ஜிதம் செய்தனர். உறவினர்களான அஜித், அமரன், வெங்கடேஸ்வரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து தங்க நாணயங்களை எடுத்துக்கொண்டு காலி சொம்பை ஏரியில் வீசினர்.

    மேலும் இதனை வெளியே சொல்லக்கூடாது என வருணையும், சுப்பிரமணியத்தையும் மிரட்டினர். இதற்கிடையில் வருண் தங்க காசுகளை தெரியாமல் செல்போனில் போட்டோ எடுத்துக் கொண்டார்.

    இதையடுத்து அஜித், அமரன் வெங்கடேஸ்வரன் ஆகியோர் தங்க நாணயங்களை சென்னைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பல லட்சம் ரூபாய்க்கு தங்க காசுகளை விற்பனை செய்து பணத்தை பெற்றனர் அதில் சுமார் 770 கிராம் தங்கத்தை உருக்கி நகைகள் செய்து கொண்டனர்.

    தங்கத்தை விற்பனை செய்த ரூ.4 லட்சம் பணத்தில் பழைய சொகுசு கார் மற்றும் ஆட்டோ வாங்கினர். மேலும் தனது சகோதரி மகளிர் குழு மூலம் வாங்கிய ஒரு லட்சம் கடனை அடைத்தனர்.

    தொடர்ந்து 3 பேரும் உல்லாசமாக வாழ தொடங்கினர். புதையல் மூலம் கிடைத்த பணத்தில் தனக்கு பங்கு கிடைக்காததால் வருண் ஆத்திரம் அடைந்தார்.

    மேலும் அவர்களை காட்டி கொடுக்க முடிவு செய்தார். தனது செல்போனில் வைத்திருந்த தங்கக் காசுகள் படத்தை அவரது சகோதரியிடம் காண்பித்தார்.

    மேலும் இது குறித்து நெல்லூர் மாவட்ட கலெக்டரிடம் புகைப்படத்துடன் கூடிய ஆதாரத்துடன் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து புதையலாக கிடைத்த பொருட்களை மீட்க உத்தரவிடப்பட்டது.

    போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித், அமரன், வெங்கடேஸ்வரன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் புதையலில் இருந்த தங்க காசுகளை விற்பனை செய்ததும் நகைகளாக மாற்றி வைத்திருப்பது தெரிய வந்தது.

    அவர்களிடம் இருந்து சென்னையில் விற்கப்பட்ட தங்க நாணயங்கள் மற்றும் ரூ. 14 லட்சம் பணம், 21 பவுன் தங்கம் அவர்கள் பதுக்கி வைத்திருந்த 436 சிறிய தங்க நாணயங்கள் 63 பெரிய தங்க நாணயங்கள், ஒரு சொகுசுகார் ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×