search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வாரணாசியில் நவம்பர் 16-ந் தேதி முதல் 2,500 பேர் பங்கேற்கும் காசி தமிழ்ச்சங்கமம்
    X

    வாரணாசியில் நவம்பர் 16-ந் தேதி முதல் 2,500 பேர் பங்கேற்கும் காசி தமிழ்ச்சங்கமம்

    • பிரதமரின் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணர்வின் கீழ் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், சினிமா, இசை, தொழிலதிபர்கள், ஆதீனங்கள், கிராமப்புற பூசாரிகள் என 2,500 பேர் வரை இதில் பங்கேற்கிறார்கள்.

    புதுடெல்லி:

    டெல்லியில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான், இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாரதிய பாஷா சமிதி (பி.பி.எஸ்.) என்கிற அமைப்பு தமிழ் கலாசாரத்துக்கும் காசிக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் பழைமையான தொடர்புகளை மீண்டும் கண்டறிந்து உறுதிப்படுத்தி கொண்டாடும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கார்த்திகை மாதம் அனைவரும் சிவனை வழிபட்டு விளக்குகளை ஏற்றுவர்.

    அந்த மாதத்தையொட்டி இது நடைபெறுகிறது. இதற்கு மத்திய அரசும், உத்தரபிரதேச அரசும் உதவும்.

    ஒரு மாத கால நிகழ்ச்சியாக 'காசி தமிழ்ச் சங்கமம்' வாராணசியில் (காசி) நவம்பர் 16-ந் தேதி முதல் டிசம்பர் 19-ந் தேதி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்தியா நாகரிக இணைப்பின் சின்னம். இரண்டு வரலாற்று அறிவு மற்றும் கலாசார மையங்கள் மூலம் இந்தியாவின் ஒற்றுமையைப் புரிந்துகொள்ள காசி தமிழ்ச் சங்கமம் ஒரு சிறந்த தளமாக இருக்கும்.

    பிரதமரின் 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற உணர்வின் கீழ் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இரு பண்டைய வெளிப்பாடுகளின் பல்வேறு அம்சங்களில் வல்லுநர்கள் அறிஞர்கள் பங்கேற்கும் கல்விப் பரிமாற்றங்கள் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் இடம்பெறும்.

    இலக்கியம், பழங்கால நூல்கள், தத்துவம், ஆன்மிகம், இசை, நடனம், நாடகம், யோகா, ஆயுர்வேதம், கைத்தறி, கைவினைப் பொருள்கள் மற்றும் நவீன அறிவின் பல்வேறு அம்சங்கள் காசி தமிழ்ச்சங்கமத்தில் உள்ளடக்கியதாக இருக்கும். இதில் சென்னை ஐ.ஐ.டி., பனாரஸ் பல்கலைக்கழக நிபுணர்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து 12 குழுக்களில் தலா 210 பேர் பங்கேற்கிறார்கள்.

    கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், சினிமா, இசை, தொழிலதிபர்கள், ஆதீனங்கள், கிராமப்புற பூசாரிகள் என 2,500 பேர் வரை இதில் பங்கேற்கிறார்கள் என்றனர்.

    இந்தி திணிப்பு குறித்த தமிழக முதல்வரின் கடிதம் குறித்து மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறுகையில், "அண்ணா பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ் உள்ளிட்ட எல்லா மொழிகளையும் தேசிய மொழிகள் என்றும், இந்த மொழிகளில் பொறியியல் உள்ள தொழில் நுட்பப் பாடங்களைப் பயிற்றுவிக்க வேண்டும் எனவும் தமிழக முதல்-அமைச்சர் முன்னிலையிலேயே பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    தற்போது உள்துறை மந்திரி அமித்ஷா தொழில் நுட்பப் படிப்புகளுக்கு அந்தந்தப் பகுதியில் உள்ள தாய்மொழி தான்இணைப்பு மொழி (பயிற்று மொழி) எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தி பேசும் மாநிலங்களில் இந்திதான் பயிற்று மொழி. அதேபோன்று, மற்ற பகுதிகளில் அந்தந்த தாய்மொழிகள் தான் பயிற்று மொழியாக இருக்கும் என்றுதான் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்" என்றார்.

    Next Story
    ×