search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பட்ஜெட் தாக்கல்
    X
    பட்ஜெட் தாக்கல்

    அனைத்து தொகுதிகளிலும் நடமாடும் ரேசன் கடைகள்- கேரள பட்ஜெட்டில் அறிவிப்பு

    கேரளாவில் 5ஜி சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும், கண்ணூரில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள சட்டசபையில் இன்று நிதியமைச்சர் கே.என்.பாலகோபால், 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஐ-பேட் மூலம் பாலகோபால் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ததன்மூலம், முதல் காகிதமில்லா பட்ஜெட் என்ற சிறப்பை பெற்றுள்ளது. வருவாய் செலவினம் ரூ.157065.89 கோடி மற்றும் வருவாய் பற்றாக்குறை ரூ.22968.09 கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    கொரோனாவின் தாக்கத்தால் ஏற்பட்ட நிதி நெருக்கடி இருந்தபோதிலும், பட்ஜெட்டில் சாமானிய மக்கள் மீது வரிச்சுமை திணிக்கப்டவில்லை. தகவல் தொழில்நுட்பம், தொழில்துறைகள் மற்றும் உள்கட்டமைப்பு போன்றவற்றுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    பொருளாதார நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சில அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆண்டுக்கு ரூ.350 கோடி கூடுதல் வருவாய் வரும் வகையில், அடிப்படை நில வரியில் திருத்தம், நிலம் மற்றும் மோட்டார் வாகன வரியின் நியாயமான மதிப்பை அதிகரித்தல், பழைய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட பசுமை வரியை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கே-ரெயில் திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சமீபத்திய மத்திய பட்ஜெட் இந்த திட்டத்தை புறக்கணித்ததாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் மாநில பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. மின்சார ரெயில்வே அமைப்பு தற்போது காணப்படும் மிகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறை என்று கூறிய நிதியமைச்சர், இந்த திட்டத்திற்கு விரைவில் மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    ‘அனைத்து தொகுதிகளிலும் நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்கப்படும். மீனவர்கள் மற்றும் பட்டியலின சமூகங்கள் உள்ளிட்ட விளிம்புநிலைப் பிரிவினர் வசிக்கும் பகுதிகளில் நடமாடும் விற்பனை நிலையங்கள் மூலம் வீட்டு வாசலில் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும். பொது விநியோகத் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.2,063.64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

    கேரளாவில் 5ஜி சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். கண்ணூரில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். தகவல் தொழில்நுட்ப காரிடார் விரிவாக்கத்திற்காக, கொல்லத்தில் 5,00,000 சதுர அடி பரப்பளவில் ஒரு தகவல் தொழில்நுட்ப வசதி அமைக்கப்பட உள்ளது. புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்களுக்கு நிலம் கையகப்படுத்துதல் மற்றும் ஏற்கனவே உள்ள பூங்காக்களை விரிவுபடுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய திட்டங்களுக்காக பட்ஜெட்டில் மொத்தம் 1100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    தொழிலாளர்கள் தங்கள் வீட்டுக்கு அருகாமையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தவும், படித்த இல்லத்தரசிகளை பணிகளில் ஈடுபடுத்தவும் பட்ஜெட்டில் ரூ.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. 
    Next Story
    ×