search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி கோவில்
    X
    திருப்பதி கோவில்

    கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் திருப்பதியில் ஒரேநாளில் 67 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

    கொரோனா தொற்றுக்கு பிறகு தற்போது தினமும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருவதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் மீண்டும் அதிகரித்து களைகட்ட தொடங்கியுள்ளது.
    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    கொரோனா தொற்று காரணமாக 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

    தொற்று பரவல் குறைந்ததால் ஜூன் மாதம் ரூ.300 ஆன்லைன் டிக்கெட்டில் குறைந்த அளவில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    கடந்த ஆண்டு மீண்டும் கொரோனா 2-வது அலை காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது.

    மேலும் திருப்பதியில் ஊரடங்கு அமலில் இருந்ததால் குறைந்த அளவு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் கூட்டம் இன்றி திருப்பதி வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்த நிலையில் தொற்று பரவல் படிப்படியாக குறைந்ததால் பக்தர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கப்பட்டது. முதலில் ரூ.300 கட்டணத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் ஆன்லைனில் இலவச தரிசன டோக்கன் விநியோகிக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தினசரி 25 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு சென்று வந்தனர்.

    இந்த நிலையில் நேரடியாக இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டு 3 இடங்களில் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு சென்று வருகின்றனர். முதலில் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    தற்போது ரூ.300 இலவச தரிசன டிக்கெட்டில் 25 ஆயிரம் பக்தர்களும், நேரடி இலவச தரிசனத்தில் 30,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.

    இதனால் தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்பு எந்த அளவுக்கு இருந்ததோ அதேபோல் வழக்கமான சகஜ நிலைக்கு திரும்பி உள்ளது. நேற்று 67,750 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 30,192 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.13 கோடி உண்டியலில் காணிக்கையாக கிடைத்தது.

    கொரோனா தொற்றுக்கு பிறகு தற்போது தினமும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருவதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் மீண்டும் அதிகரித்து களைகட்ட தொடங்கியுள்ளது. நேற்று கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் அதிகபட்சமாக 67 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளது பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

    திருப்பதியில் கடந்த மாதம் 25-ந்தேதி அதிகபட்சமாக ரூ.5.41 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது குறிப்பிடத்தக்கது.


    Next Story
    ×