search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கிரிப்டோகரன்சி
    X
    கிரிப்டோகரன்சி

    நாக்பூரில் ரூ.40 கோடி கிரிப்டோகரன்சி மோசடி- மேலும் 7 பேர் கைது

    நாக்பூரில் ரூ.40 கோடி கிரிப்டோகரன்சி முதலீட்டு மோசடி தொடர்பான வழக்கில் மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    நாக்பூர்:

    மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ய வைத்து 2000க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் ரூ.40 கோடி அளவிற்கு மோசடி செய்தது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த மோசடியில் முக்கிய குற்றவாளியான நிஷித் வாஸ்னிக், அவரது மனைவி மற்றும் அவர்களின் 2 கூட்டாளிகள் நேற்று கைது செய்யப்பட்டனர். இன்று  மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

    இதன்மூலம், கிரிப்டோகரன்சி மோசடியில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம், மகாராஷ்டிரா முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளின் கீழ் யசோதரா நகர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

    முக்கிய குற்றவாளியான நிஷித் வாஸ்னிக், 'ஈதர்' கிரிப்டோகரன்சியை கையாள்வதாக கூறும் ஒரு நிறுவனத்தில் முதலீட்டாளர்களை முதலீடு செய்ய வைப்பதற்காக ஆடம்பரமாக வலம் வந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    முதலீடுகளின் மதிப்பை உயர்த்தி காட்டுவதற்காக நிறுவனத்தின் இணையதளத்தை அவர் சாமர்த்தியமாக கையாண்டுள்ளார். 2017 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் மோசடியாக தனது கணக்குகளுக்கு பணத்தை மாற்றி உள்ளார். முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை பெறுவதற்காக, மத்தியப் பிரதேசத்தில் உள்ள பஞ்சமாரியில் கிரிப்டோகரன்சி முதலீடு குறித்த கருத்தரங்கையும் அவர் ஏற்பாடு செய்திருந்தார் என அந்த அதிகாரி கூறினார்.

    முதலீட்டாளர்களை ஏமாற்றிவிட்டு கடந்த ஆண்டு மார்ச் மாதம் தலைமறைவான நிஷித் வாஸ்னிக், நேற்று புனே மாவட்டத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×