search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாம்பு பிடிக்கும் சுரேஷ்
    X
    பாம்பு பிடிக்கும் சுரேஷ்

    நல்ல பாம்பு கடித்ததில் சிகிச்சை பெறும் பாம்பு பிடி மன்னனின் நிலை என்ன?- டாக்டர் தகவல்

    வாவா சுரேஷ் இரண்டு நாட்களில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என்று டாக்டர் கூறினார்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் வாவா சுரேஷ். பாம்பு பிடிப்பதில் வல்லவர்.

    கேரளா முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகள் பிடித்துள்ளார். திருவனந்தபுரம் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று குடியிருப்புகளுக்குள் புகுந்த பாம்புகளை லாவகமாக பிடித்து அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விட்டுள்ளார்.

    இதுபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு கோட்டயம் பகுதியில் உள்ள குடியிருப்பில் புகுந்த பாம்பை பிடிக்க சென்றார். அந்த பாம்பை பிடித்து அதனை சாக்கு பைக்குள் போட முயன்றபோது அந்த பாம்பு, திடீரென வாவா சுரேசின் வலது கால் மூட்டில் கடித்து விட்டது.

    மூர்க்கன் வகை பாம்பு என்பதால், அது கடித்த சிறிதுநேரத்தில் வாவா சுரேஷ், மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்பு அவர் கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். கடந்த 2 நாட்களாக அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.

    ஆஸ்பத்திரியில் பேச்சு மூச்சின்றி கிடந்த வாவா சுரேஷூக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் அளிக்கப்படும் என்று மாநில சுகாதார துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.

    அதன்படி கோட்டயம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி சூப்பிரண்டு டாக்டர் ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர். நேற்றிரவு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர் ஜெயக்குமார் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

    வாவா சுரேஷூக்கு தற்போது செயற்கை சுவாச கருவிகள் அகற்றப்பட்டு விட்டது. அவர் தற்போது சுயமாக சுவாசிக்கிறார். இரண்டு நாட்களில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார், என்றார்.

    வாவா சுரேஷ் பாம்பு கடிக்காக தீவிர சிகிச்சை பிரிவில் இதற்கு முன்பும் பலமுறை அனுமதிக்கப்பட்டு உள்ளார். அப்போதும் அவர் உடல்நலம் தேறி மீண்டு வந்துள்ளார். இப்போதும் அதுபோல அவர் விரைவில் குணமாகி வெளியே வருவார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×