search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கனமழையால் சேதமடைந்த பகுதிகளில் மீட்பு பணிகள் நடந்த காட்சி.
    X
    கனமழையால் சேதமடைந்த பகுதிகளில் மீட்பு பணிகள் நடந்த காட்சி.

    ஆந்திராவில் பெய்த கனமழையால் விஜயவாடா- சென்னை சாலையில் பாலம் துண்டிப்பு

    ரெயில்பாதை சேதமடைந்ததால் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. ரெயில் பாதையை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. 4 மாவட்டங்களில் நேற்று வரை 3,756 கிலோமீட்டர் சாலைகள் சேதமடைந்துள்ளன.

    திருப்பதி:

    குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆந்திராவில் கரையை கடந்தது. இதன் காரணமாக சித்தூர், கடப்பா, நெல்லூர், ஆனந்தபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. ஏற்கனவே பருவமழை காரணமாக ஆந்திராவில் உள்ள ஆறு, ஏரி, குளங்கள் நிரம்பி வழிந்தன.

    இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கொட்டித் தீர்த்த மழையால் மேலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சித்தூர் மாவட்டம் நீவா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கால்நடைகள் மற்றும் ஆட்டோ, பைக் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.

    இதே போல் சித்தூர் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் மண்டலம் ராயல செருவு பெரிய ஏரி நேற்று மாலை முழு கொள்ளளவை எட்டியது. ஏரிக்கரை பலவீனமாக இருந்ததால் எப்போது வேண்டுமானாலும் ஏரி உடையும் அபாயம் உள்ளது. ஏரி உடைந்தால் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்படையும் என உணர்ந்த மாவட்ட நிர்வாகம் பி.வி.புரம், பாலாஜி பள்ளி, எஸ்.ஆர்.புரம், கங்கிரெட்டி பள்ளி, கம்ம கண்டிரிகா, நென்னூர், கொத்த நென்னூர் உட்பட 18 கிராம மக்களை மீட்டு பள்ளி, கல்லூரி மற்றும் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    இதேபோல் நெல்லூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் அங்குள்ள பெண்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பெண்ணா ஆற்றின் கரை உடைந்து கோடூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலம் வழியாக பாய்ந்து ஓடியது. மழை வெள்ளத்தின் அளவு அதிகமாக இருந்தால் பாலத்தின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டன.

    இதனால் மேம்பாலம் துண்டிக்கப்பட்டு விஜயவாடா-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அதே பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்துச் சென்றது. இதனால் அந்த பாதையில் ரெயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    ஒரே நேரத்தில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரெயில் பாதையிலும் பாதிப்பு ஏற்பட்டதால் வாகன போக்குவரத்தை கடப்பா-சித்தூர் வழித்தடத்தில் அதிகாரிகள் மாற்றிவிட்டனர். ரெயில்பாதை சேதமடைந்ததால் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. ரெயில் பாதையை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. 4 மாவட்டங்களில் நேற்று வரை 3,756 கிலோமீட்டர் சாலைகள் சேதமடைந்துள்ளன. 1,131 வீடுகள் இடிந்து விழுந்தன. 2, 007 வீடுகள் சேதமடைந்துள்ளன. 44,275 கிராம மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பதி அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு நடை பாதையில் மழை வெள்ளம் முற்றிலும் குறைந்தது. இதனால் நடைபாதையில் விழுந்துள்ள பாறைகள், மரங்கள் மற்றும் மண் சரிவுகளை அப்புறப்படுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இதையும் படியுங்கள்... நான் இந்தியாவில்தான் இருக்கிறேன்: விசாரணைக்கு ஆஜராக தயார்- மும்பை முன்னாள் கமிஷனர் கோர்ட்டில் தகவல்

    Next Story
    ×