search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி, நவீன் பட்நாயக்
    X
    பிரதமர் மோடி, நவீன் பட்நாயக்

    இன்னும் 8 மாதங்களுக்கு இலவச ரேசன் வழங்குக... பிரதமருக்கு ஒடிசா முதல்வர் கடிதம்

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு 80 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக ரேஷன் வழங்கியது.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு  மார்ச்  மாதம் நாடு தழுவிய முழுமையான லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏழை மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. ஆகவே, பிரதம மந்திரியின் கரீப் கல்யாண் யோஜனா (PM Garib Kalyan Yojana) என்னும் ஏழைகளுக்கான நலத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதிலும் உள்ள 80 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷனில் இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கப்படுகிறது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் நோக்கில் மூன்று மாதங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம்,  2021 நவம்பர் மாதம், அதாவது தற்போது வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் இந்த திட்டம் மேலும் நீட்டிக்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

    இந்த நிலையில் பிரதம மந்திரியின் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச அரசி அல்லது கோதுமை மேலும் 8 மாதங்களுக்கு வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கடிதம் எழுதியுள்ளார்.

    கோப்புப்படம்

    நவீன் பட்நாயக் எழுதியுள்ள கடிதத்தில் ‘‘கொரோனா சூழ்நிலை சரியாகும் வரையிலும், ஒடிசா மாநிலம் முழுமையாக வழக்கமான நிலைக்கு திரும்பு வரையிலும் வழங்க வேண்டும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக, மத்திய உணவுப் பொருட்கள் துறை செயலர் சுதான்ஷு பாண்டே இதுகுறித்து செய்தியாளர்களிடம்  கூறுகையில், ‘‘நாடு முழுதும் 80 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் உணவுப் பொருட்களுடன், கூடுதலாக இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கப்படுகிறது என்றும்,  தற்போது கொரோனா தொற்று பாதிப்பில் பாதிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதோடு, வெளிச்சந்தையில் உணவுப் பொருட்கள் விற்பனையும் அதிகரித்து உள்ளது. எனவே, பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச உணவுப் பொருட்கள் வழங்குவதை மேலும் நீட்டிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை’’ எனக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×