search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜ்நாத் சிங்
    X
    ராஜ்நாத் சிங்

    பெண்களுக்காக முப்படைகளும் கதவைத் திறந்து வைத்துள்ளன: ராஜ்நாத் சிங்

    துரதிர்ஷ்டவசமாக நாட்டின் சுதந்திரத்துக்கு பின்னர் தேச பாதுகாப்பில் பெண்கள் முக்கிய பங்காற்றவில்லை. ஆனால் இப்போது அந்தச் சூழல், வேகமாக மாறி இருக்கிறது.
    ஜான்சி :

    ஜான்சி ராணி என்று அழைக்கப்படுகிற ராணி லட்சுமிபாய், 1857-ம் ஆண்டில் இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காக நடைபெற்ற முதல் போரில் கலந்து கொண்ட முன்னணி வீராங்கனை ஆவார்.

    அவரது பிறந்த நாள், உத்தரபிரதேசத்தில் உள்ள ஜான்சியில் நேற்று நடைபெற்றது. இதில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ராணி லட்சுமிபாயின் வீரம், பெண் சக்திக்கு புத்துயிரூட்டியது. பெண் என்பது, போர்க்களத்தில் அவருக்கு ஒரு போதும் ஒரு தடையாக அமைந்தது இல்லை. நமது சமூகத்தில் பெண்கள் பலவீனமானவர்கள் என்று பலரும் நம்புகிறார்கள். ஆனால் அவர்கள் ராணி லட்சுமிபாய், ஜால்கரிபாய், அவந்திபாய் போன்ற வீராங்கனைகளை நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் பாதுகாப்பு துறையில் முக்கிய பங்களிப்பு செய்ய முடியும் என்பதை நிரூபித்தார்கள்.

    நேதாஜி சுபாஷ் சந்திரபோசும் தனது இந்திய தேசிய ராணுவத்தில் ராணி லட்சுமிபாய் படைப்பிரிவைக் கொண்டிருந்தார். துரதிர்ஷ்டவசமாக நாட்டின் சுதந்திரத்துக்கு பின்னர் தேச பாதுகாப்பில் பெண்கள் முக்கிய பங்காற்றவில்லை. ஆனால் இப்போது அந்தச் சூழல், வேகமாக மாறி இருக்கிறது.

    மோடி பிரதமரான பின்னர், எல்லா படைகளிலும் பெண்கள் பங்களிப்பு அதிகரித்து வருகிறது.

    நான் உள்துறை மந்திரியாக இருந்தபோது, போலீசில் குறைந்தது 33 சதவீதம் பெண்கள் இடம் பெற வேண்டும் என்று வழிகாட்டுதலை பிறப்பித்தேன். இதன்பின்னர் துணை ராணுவ படைகளிலும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது. போலீஸ் படையிலும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது. முப்படைகளும் பெண்களுக்காக கதவுகளை திறந்து வைத்துள்ளன.

    தேசிய ராணுவ அகாடமியிலும் பெண்களுக்கு கதவுகள் திறந்தே உள்ளன. இதுதான் ராணி லட்சுமிபாய்க்கு உண்மையான அஞ்சலி. சமீபத்தில் நடந்த தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் 2 லட்சம் பெண்கள் கலந்து கொண்டார்கள். ராணுவத்தில் பெண்கள் நிரந்தர பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×