search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தள்ளுவண்டியில் உடலை கொண்டு சென்ற காட்சி
    X
    தள்ளுவண்டியில் உடலை கொண்டு சென்ற காட்சி

    கொரோனாவால் இறந்த இளைஞரின் உடலை தள்ளுவண்டியில் கொண்டு சென்ற ஊழியர்கள்- விசாரணைக்கு உத்தரவு

    புனேயில் கொரோனாவால் இறந்த இளைஞரின் உடலை தள்ளுவண்டியில் கொண்டு சென்ற சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    புனே:

    மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் கானாபூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வராத நிலையில், வீட்டில் இருந்த அவர் திடீரென உயிரிழந்தார்.  அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவரது உடலை உறவினர்கள் அடக்கம் செய்ய சுகாதாரத் துறையினர் அனுமதிக்கவில்லை. 

    அவரது உடலை ஒரு தள்ளுவண்டியில் வைத்து சுகாதாரத்துறை ஊழியர்கள் எடுத்துச் சென்று தகனம் செய்தனர். இறந்தவரின் உடலை கைவண்டியில் எடுத்துச் சென்றது விமர்சனத்திற்கு உள்ளானது.

    இதற்கிடையே இளைஞருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், எந்த மருத்துவமனையிலும் படுக்கை இல்லாததால் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு அவர் இறந்ததாக கிராம பஞ்சாயத்து தலைவர் குற்றம்சாட்டி உள்ளார்.  அவரது உடல்நிலை மோசமடைந்தபோது ஆம்புலன்சுக்கு போன் செய்தும் வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    ஆனால் இந்த குற்றச்சாட்டை புனே மாவட்ட பஞ்சாயத்து சிஇஓ மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:-

    உடல்நலம் பாதிக்கப்பட்ட இளைஞரை ஆம்புலன்ஸ் மூலம் நவாலே மருத்துவமனைக் கொண்டு சென்றனர். அவரது கொரோனா பரிசோதனை முடிவுகள் அப்போது வரவில்லை. மருத்துவமனையில் சேரும்படி கூறியபோது மறுத்துவிட்டார். அத்துடன் யாரிடமும் சொல்லாமல் வீட்டிக்கு சென்றுவிட்டார்.

    ஆம்புலன்ஸ் சென்றடைய முடியாத நெரிசல் மிகுந்த இடத்தில் அவர் வசித்து வந்தார். அவரது உடல் வீட்டில் இருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. கொரோனாவால் இறந்தவர்களை தோளில் சுமந்து செல்ல அனுமதி இல்லை. எனவே, அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப தள்ளுவண்டியில் உடல் எடுத்துச்செல்லப்பட்டது. எனினும் இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×