
கேரள மாநிலம் கொல்லம் நீண்டகரா புத்தன்துறையைச் சேர்ந்தவர் விஷ்ணுபிரசாத் (வயது 55).
இவர் திருவனந்தபுரம் அருகே உள்ள கரமனை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவரது 3 பிள்ளைகளில் 2 பேருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.
இளைய மகளான ஆர்ச்சாவுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து மாப்பிள்ளையும் பார்க்க தொடங்கினார். கொல்லத்தை சேர்ந்த ஒரு வாலிபரை தனது மகளுக்கு வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுத்தார். திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெறத் தொடங்கின.
திருமணத்திற்கு முதல் நாள் நிச்சயதார்த்தமும் கோலாகலமாக நடந்தது. கடைசி மகளின் திருமணம் என்பதால் விஷ்ணு பிரசாத் செலவைப் பற்றி கவலைப்படாமல் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து வந்தார். நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இசைக்கச்சேரிக்கும் ஏற்பாடு செய்திருந்தார்.
இசைக்கச்சேரியில் பாடகர்கள் பாடிக்கொண் டிருந்த போது விஷ்ணு பிரசாத்தின் நண்பர்கள் சிலர் அவரையும் பாடல் பாடும்படி கூறினார்கள். விஷ்ணுபிரசாத் நன்றாக பாடக்கூடியவர் என்பதால் அவரும் அதை ஏற்று ஒரு பாடலை உற்சாகமாக பாடத் தொடங்கினார். ஆனால் சிறிது நேரத்திலேயே அவர் மேடையில் மயங்கி சரிந்தார். நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தந்தையின் நிலையைப் பார்த்து ஆர்ச்சாவும் கதறி அழுதார். அவருக்கு ஆறுதல் கூறிய உறவினர்கள் நிச்சயதார்த்த நிகழ்ச்சியை தொடரும்படி கூறிவிட்டு, உடனடியாக விஷ்ணுபிரசாத்தை அந்த பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
