search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும்? வானிலை ஆய்வு மையம் தகவல்
    X

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும்? வானிலை ஆய்வு மையம் தகவல்

    அந்தமான் கடல் பகுதியில் தென்பட்ட அறிகுறிகளை வைத்து கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும்? என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது கோடை வெயில் வாட்டுகிறது.

    அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வாட்டி வதைத்த வெயில் கடந்த 4-ந்தேதி முதல் மேலும் அதிகரித்தது. தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் வெயிலின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டையும் தாண்டி பதிவானது.

    வழக்கமாக கோடையில் கோடை மழை பெய்யும். இம்முறை எதிர்பார்த்த அளவுக்கு கோடை மழை பெய்யவில்லை. அக்னி நட்சத்திரமும் வருகிற 29-ந்தேதி முடிகிறது. அக்னி நட்சத்திரம் முடிந்த ஓரிரு நாளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம்.

    தென்மேற்கு பருவமழை கேரளாவின் அந்தமான், நிக்கோபார் தீவுகளில் இருந்து தொடங்கும். அங்கிருந்து வீசும் காற்றும், மழை மேகமும் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறியை காட்டும்.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் அந்தமான் கடல் பகுதியில் நேற்று தென்பட்டது. என்றாலும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல்வாரத்திலேயே தொடங்கும் என்று கேரள வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


    தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் நிக்கோபார் தீவுகளில் நேற்று மழைக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கின. இது ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சகுனம் என்று வானிலை ஆய்வு மையம் கருதுகிறது.

    ஜூன் 4-ந்தேதி முதல் 6-ந்தேதிக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் இதன் மூலம் இந்தியாவின் தென்மாநிலங்களில் மழை பொழிவு ஏற்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தை விட குறைவாகவே பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும் போது தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும் மழை பெய்யும். குறிப்பாக நெல்லை, குமரி, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் அதிக மழை பெய்யும்.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பெய்யும் முன்பே வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த ஓரிரு நாட்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
    Next Story
    ×