search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    அருணாசல பிரதேச சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் பா.ஜனதா போட்டியின்றி தேர்வு
    X

    அருணாசல பிரதேச சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் பா.ஜனதா போட்டியின்றி தேர்வு

    அருணாசல பிரதேச சட்டசபை தேர்தலில் 2 பா.ஜனதா வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு ஆகின்றனர். #Arunachal #BJPCandidate
    புதுடெல்லி:

    அருணாசல பிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி பெமா காண்டு தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. அந்த சட்டசபையின் ஆயுள் ஜூன் 1-ந் தேதி முடிகிறது. எனவே பாராளுமன்ற தேர்தலுடன் 60 இடங்களை கொண்ட அருணாசல பிரதேச சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.

    இதேபோன்று ஆயுள்காலம் முடிகிற சிக்கிம், ஒடிசா, ஆந்திரா மாநில சட்டசபைகளுக்கும், பாராளுமன்ற தேர்தலுடன் தேர்தல் நடத்தப்படுகிறது.

    60 இடங்களை கொண்ட அருணாசல பிரதேச சட்டசபை தேர்தலில், ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 11-ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 18-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி முடிந்தது. நேற்று வேட்பு மனு பரிசீலனை முடிந்தது. வேட்பு மனுக்களை திரும்பப்பெற நாளை (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும்.

    இந்த நிலையில், அங்கு சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் 2 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்கள், ஆலோ கிழக்கு தொகுதியில் போட்டியிடும் சர் கெண்டோ ஜினியும், யாசூலி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் எர் தபா தெதிரும் ஆவார்கள்.

    அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களுக்கு எதிராக யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

    வேட்பு மனு தாக்கல் முடிவு அடைந்து விட்டபடியால் அவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.

    இதையொட்டி பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் ராம்மாதவ் டுவிட்டரில் மகிழ்ச்சியுடன் 2 பதிவுகள் வெளியிட்டார்.

    ஒரு பதிவில், “அருணாசல பிரதேசத்தில் இருந்து பாரதீய ஜனதா கட்சியின் வெற்றி அணிவகுப்பு தொடங்கி விட்டது. ஆலோ கிழக்கு தொகுதியில் சர் கெண்டோ ஜினி போட்டியின்றி வெற்றி பெற்றிருக்கிறார்” என குறிப்பிட்டுள்ளார்.

    மற்றொரு பதிவில், “அருணாசலபிரதேசத்தில் இருந்து மற்றொரு வெற்றியும் வந்திருக்கிறது. யாசூலி சட்டசபை தொகுதியில் எர் தபா தெதிர் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.

    2009 சட்டசபை தேர்தலில், முதல்-மந்திரி தோர்ஜீ காண்டுவும் (காங்கிரஸ்), 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் போட்டியின்றி தேர்வு பெற்றது நினைவுகூரத்தக்கது.
    Next Story
    ×