search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவாவில் பாஜக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
    X

    கோவாவில் பாஜக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

    கோவா மாநில சட்டசபையில் இன்று பாஜக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. #GoanewCM #ManoharParikkar #PramodSawant
    பனாஜி:

    கோவா முதல்-மந்திரியாக இருந்து வந்த மனோகர் பாரிக்கர் கடந்த 17-ந்தேதி மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து அங்கு முதல்- மந்திரி நாற்காலி யாருக்கு என்ற கேள்வி எழுந்தது.

    40 இடங்களை கொண்ட கோவா சட்டசபையில் 14 உறுப்பினர்களுடன் தனிப் பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னர் மிருதுளா சின்காவை சந்தித்து வலியுறுத்தினர்.

    ஆனால் பாரதீய ஜனதா கட்சிக்கு 12 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்; அதன் கூட்டணியில் உள்ள மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி (எம்.ஜி.பி.), கோவா பார்வர்டு கட்சி (ஜி.எப்.பி.) ஆகியவற்றுக்கு தலா 3 உறுப்பினர்களும், சுயேச்சைகள் 3 பேரும் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவு அளிக்கின்றனர்.



    இந்த நிலையில் கோவா சட்டசபை சபாநாயகராக இருந்து வந்த பிரமோத் சாவந்த் (வயது 46), புதிய முதல்-மந்திரியாக நேற்று முன்தினம் தேர்ந் தெடுக்கப்பட்டார். ஆயுர்வேத மருத்துவரான இவர், மறைந்த முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

    பிரமோத் சாவந்த் ஆட்சி அமைக்க கவர்னர் மிருதுளா சின்கா அழைப்பு விடுத்தார்.

    அதைத் தொடர்ந்து பனாஜியில் உள்ள கவர்னர் மாளிகையில் நள்ளிரவில் நடந்த எளிய நிகழ்ச்சியில் புதிய முதல்-மந்திரி பிரமோத் சாவந்துக்கு கவர்னர் மிருதுளா சின்கா பதவிப்பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

    அவருடன் சுதன் தாவ்லிகார், விஜய் சர்தேசாய், பாபு அஜ்காவோங்கர், ரோகன் காண்டே, கோவிந்த் கவுடே, வினோத பால்யகர், ஜெயேஷ் சால்காவோங்கர், மாவின் கோதின்ஹோ, விஷ்வஜித் ரானே, மிலிந்த் நாயக், நிலேஷ் கேப்ரால் ஆகியோர் கேபினட் மந்திரிகளாக பதவி ஏற்ற னர். மந்திரிகள் இலாகா அறிவிக்கப்படவில்லை.

    சுதன் தாவ்லிகார், விஜய் சர்தேசாய் ஆகிய 2 பேரும் துணை முதல்-மந்திரிகளாக செயல்படுவார்கள் என தகவல்கள் கூறுகின்றன.

    பதவி ஏற்பு விழாவில் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான நிதின் கட்காரி கலந்துகொண்டார்.

    கோவாவில் மீண்டும் பாரதீய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க கவர்னர் மிருதுளா சின்கா வாய்ப்பு வழங்கியதை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடி உள்ளது.

    இதையொட்டி மாநில காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் சுனில் காவாதாங்கர் விடுத்துள்ள அறிக்கையில், “தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியை அரசு அமைக்க அழைக்காத கவர்னர் மிருதுளா சின்காவின் செயல் கண்டனத்துக்கு உரியது. ஆட்சி அமைக்க போதுமான எண்ணிக்கை இல்லாதபோதும், பாரதீய ஜனதா கட்சி குதிரைப்பேரம் நடத்த வழிவகுத்து விட்டார். கவர்னர் பாரதீய ஜனதா கட்சியின் ஏஜெண்டாக செயல்பட்டுள்ளார்” என சாடி உள்ளார்.

    இதற்கிடையே கோவா சட்டசபையில் முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் இன்று (புதன்கிழமை) நம்பிக்கை வாக்கு கோருகிறார். இதற்கான அழைப்பை கவர்னர் விடுத்துள்ளார். #GoanewCM #ManoharParikkar #PramodSawant
    Next Story
    ×