search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபேல் ஆவணத்தை திருடியவர் திருப்பி கொண்டுவந்து வைத்து விட்டாரா? - ப.சிதம்பரம் கிண்டல்
    X

    ரபேல் ஆவணத்தை திருடியவர் திருப்பி கொண்டுவந்து வைத்து விட்டாரா? - ப.சிதம்பரம் கிண்டல்

    ரபேல் ஆவணத்தை திருடியவர் திருப்பி கொண்டுவந்து வைத்து விட்டாரா? என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் கிண்டலாக பதிவிட்டுள்ளார். #Rafale #PChidambaram
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி இருந்தார்.

    இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த டிசம்பர் 14-ந் தேதி ரபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று கூறி மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, மூத்த வக்கீல் பிரசாந்த் பூ‌ஷன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த மனுவில் “ரபேல் விவகாரத்தில் மத்திய அரசு தவறான தகவல்களை அளித்துள்ளது. இதனால் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்து இருந்தனர்.

    இந்த மனு கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ரபேல் ஆவணங்கள் ராணுவ அமைச்சகத்தில் இருந்து திருடப்பட்டுள்ளது என்று மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.

    இந்த திருட்டு ஆவணங்களை ஒரு ஆங்கில பத்திரிகை வெளியிட்டது, அரசாங்க ரகசியங்களை வெளியிடுவது சட்டப்படி குற்றம் என்றும் அவர் கூறினார்.

    இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

    ராகுல்காந்தி, மாயாவதி, மம்தா பானர்ஜி, சரத்பவார் போன்றோர் இதுபற்றி உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.



    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் அளித்த பதில் தொடர்பாக 2 நாட்களுக்கு பிறகு அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் விளக்கம் என்ற பெயரில் திடீர் பல்டி அடித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ரபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் திருட்டு போகவில்லை. யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, பிரசாந்த் பூ‌ஷன் ஆகியோர் தாக்கல் செய்துள்ளது ஒப்பந்த அசலின் போட்டோ பிரதிகள் ஆகும். அரசு ஆவணங்களை போட்டோ எடுத்து வெளியிட்டதாகவே நான் குற்றம்சாட்டி இருந்தேன். இதை எதிர்க்கட்சிகள் தவறாக புரிந்துகொண்டு பாதுகாப்பு அமைச்சகம் வசமிருந்த ஆவணங்கள் திருடு போய் விட்டதாக கூறி வருகின்றன. ஆவணங்கள் திருடு போய் விட்டதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது.

    இவ்வாறு வேணுகோபால் கூறி இருந்தார்.

    இந்த நிலையில் அட்டர்னி ஜெனரல் வேணுகோபாலின் விளக்கத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கேலியும், கிண்டலுமாக பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:-

    புதன்கிழமை திருடப்பட்ட ஆவணம் வெள்ளிக்கிழமை நகல் எடுக்கப்பட்ட ஆவணமாக மாறியுள்ளது. ஆவணங்களை முதல் நாள் (புதன்கிழமை) திருடி சென்ற திருடன் மறுநாள் வியாழக்கிழமை அதை திரும்ப ஒப்படைத்து இருக்க வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன்.

    இந்த தேர்தலில் 3 வி‌ஷயங்கள் தான் முக்கியமாக பேசப்பட போகிறது. அவை வேலை வாய்ப்பு. வேலைவாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்பு.

    இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

    இதற்கிடையே இந்த விவகாரத்தில் அட்டர்னி ஜெனரல் வேணுகோபாலுக்கு ஆதரவாக மத்திய பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். #Rafale #PChidambaram
    Next Story
    ×