search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீக்கிய கலவர வழக்கு- டெல்லி கோர்ட்டில் சஜ்ஜன் குமார் ஆஜர்
    X

    சீக்கிய கலவர வழக்கு- டெல்லி கோர்ட்டில் சஜ்ஜன் குமார் ஆஜர்

    சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான மற்றொரு வழக்கின் விசாரணைக்காக காங்கிரஸ் கட்சியின் டெல்லி முன்னாள் தலைவர் சஜ்ஜன் குமார் இன்று ஆஜரானார். #AntiSikhRiotsCase #SajjanKumar
    புதுடெல்லி:

    இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தி, கடந்த 31-10-1984-ம் அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் வெடித்தது.  இதில் 2800 சீக்கியர்கள் பலியாகினர். டெல்லியில் மட்டும் 2100 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

    இது தொடர்பான ஒரு வழக்கில் இருந்து முன்னர்  நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு தற்போது டெல்லி உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. மேலும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் சஜ்ஜன் குமார் சரண் அடைய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.



    இந்நிலையில் சீக்கிய கலவரம் தொடர்பான மற்றொரு வழக்கின் விசாரணைக்காக சஜ்ஜன் குமார் இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது உயர்நீதிமன்ற உத்தரவின்படி தனது செல்போனை ஒப்படைத்தார். ஆனால் சஜ்ஜன் குமாரின் பிரதான வழக்கறிஞர் ஆஜராகாததால், விசாரணை ஜனவரி 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    கலவரத்தின்போது சுல்தான்புரியில் சுர்ஜித் சிங் என்ற சீக்கியரை கொன்றதாக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில், சஜ்ஜன் குமார், பிரம்மானந்த் குப்தா, வேதப் பிரகாஷ் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இந்த வன்முறை தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் நடைபெற்றுவந்த 241 வழக்குகள் முன்னர் முடித்து வைக்கப்பட்டன. இவற்றில் 186 வழக்குகள் உரிய விசாரணை நடத்தாமலேயே முடித்து வைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின்கீழ், இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக கண்காணிப்பு குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட் நியமித்தது.

    இந்த குழு சமர்ப்பித்த அறிக்கையை ஆய்வு செய்த சுப்ரீம் கோர்ட், மேற்படி 186 வழக்குகளையும் மீண்டும் விசாரிக்கும்படி உத்தரவிட்டது. அதன்பேரில் தற்போது விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. #AntiSikhRiotsCase #SajjanKumar
    Next Story
    ×