search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்தியபிரதேசம், மிசோரத்தில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது - 28-ம் தேதி வாக்குப்பதிவு
    X

    மத்தியபிரதேசம், மிசோரத்தில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது - 28-ம் தேதி வாக்குப்பதிவு

    மத்தியபிரதேசம், மிசோரம் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது. வரும் 28-ம் தேதி வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. #Campaigningends #MPpolls #Mizorampolls
    போபால்:

    மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலை, தலைமை தேர்தல் ஆணையம் தற்போது நடத்தி வருகிறது.

    முதலில் சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு கடந்த 12 மற்றும் 20-ந்தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. அம்மாநிலத்தில் சராசரியாக 73 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    அடுத்தகட்டமாக மத்தியபிரதேசம், மிசோரம் மாநிலங்களில் நாளை மறுநாள் (புதன்கிழமை) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மத்தியபிரதேசம் மாநிலத்தில் 230 தொகுதிகள் உள்ளன. மிசோரம் மாநிலத்தில் 40 தொகுதிகள் இருக்கின்றன.

    இந்த இரு மாநிலங்களிலும் வரும் 28-ந்தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்ற கடந்த ஒரு மாதமாக தீவிர தேர்தல் பிரசாரம் நடந்தது. இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் இரு மாநிலங்களிலும் முற்றுகையிட்டு மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்கள்.

    கடந்த ஒரு வாரமாக மத்திய பிரதேசத்திலும், மிசோரமிலும் உச்சக்கட்ட அனல் பறக்கும் பிரசாரம் நடந்தது. இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணியுடன் இரு மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. 28-ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறும்.

    வாக்குப்பதிவை சுமுகமாகவும், நியாயமாகவும் நடத்தி முடிக்க இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றமானவை கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் துணைநிலை ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட உள்ளனர்.

    இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவை முழுமையாக வீடியோவில் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று மாலை ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் இடங்களுக்கு எடுத்துச் சென்று பாதுகாக்கப்படும்.

    ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களில் வரும் 7-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிந்ததும் 5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் டிசம்பர் 11-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும். #Campaigningends #MPpolls #Mizorampolls
    Next Story
    ×