search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிரைவிங் லைசென்சு, ஆர்சி புத்தகம்- ஜூலை முதல் அமலுக்கு வருகிறது
    X

    நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிரைவிங் லைசென்சு, ஆர்சி புத்தகம்- ஜூலை முதல் அமலுக்கு வருகிறது

    ஏராளமான பாதுகாப்பு அம்சங்களுடன் நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிரைவிங் லைசென்சு, ஆர்.சி. புத்தகம் அடுத்த ஆண்டு ஜூலை முதல் வழங்கப்படுகிறது. #DrivingLicences #RCBook
    புதுடெல்லி:

    போக்குவரத்து துறையில் நாடு முழுவதும் ஒரே சீரான நடைமுறைகள் இருக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அதன்படி டிரைவிங் லைசென்சு, வாகன ஆர்.சி. புத்தகம் ஆகியவை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக அறிமுகப்படுத்த ஆலோசிக்கப்பட்டது.

    தற்போது ஒவ்வொரு மாநிலமும் அவர்கள் வகுத்துள்ள விதிகள்படி டிரைவிங் லைசென்சு, வாகன ஆர்.சி. புத்தகங்களை வழங்கி வருகிறார்கள்.

    இனி, மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே மாதிரியான போக்குவரத்து விதிகளை அறிமுகப்படுத்துகிறது. அதன் அடிப்படையில் டிரைவிங் லைசென்சு, வாகன ஆர்.சி. புத்தகம் வழங்கப்படும்.

    தற்போது நாடு முழுவதும் தினமும் 32 ஆயிரம் டிரைவிங் லைசென்சு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் 43 ஆயிரம் வாகனங்கள் பதிவு அல்லது மறுபதிவு செய்யப்பட்டு ஆர்.சி.புத்தகம் வழங்கப்படுகிறது.

    இவை அனைத்தும் ஜூலை மாதம் முதல் ஒரே மாதிரியாக வழங்கப்படும்.


    டிரைவிங் லைசென்சு ஏற்கனவே ஏ.டி.எம் கார்டு வடிவில் வழங்கப்படுகிறது. இதேபோல் இனி ஆர்.சி. புத்தகமும் ஏ.டி.எம். கார்டு வடிவில்தான் இருக்கும்.

    பாதுகாப்பு கருதியும், போலி கார்டுகள் தயாரிக்காமல் இருக்கவும் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் இந்த கார்டில் இடம்பெறும்.

    பாதுகாப்பான கொய் லோச் அச்சு தொழில் நுட்பம், மைக்ரோ பிரிண்டிங், மைக்ரோ கோடுகள், ஹாலோகிராம், வாட்டர் மார்க் போன்ற தொழில்நுட்பங்கள் அதில் புகுத்தப்பட்டு இருக்கும்.

    இந்த கார்டு நீலம் கலந்த ஊதா கலரில் அச்சிடப்படும். அதில் மைக்ரோ சிப் ஒன்று இணைக்கப்பட்டு இருக்கும். அதில், லைசென்சு விவரம் மற்றும் ஆர்.சி. புத்தகம் தொடர்பான அனைத்து விவரங்களும் இடம் பெறும்.

    லைசென்சில் ரத்த குரூப், அவர் உடல் தானம் செய்திருந்தால் அதற்கான தகவல் என எல்லா விவரங்களும் அதில் இருக்கும்.

    ஆர்.சி. புத்தகத்தில் வாகனம் விற்கப்பட்ட நாள், தகுதி நாள், வாகன பிரிவு, வர்த்தக பயன்பாட்டுக்கா, சொந்த பயன்பாட்டுக்கா என்ற விவரம், வாகன ஜேசிஸ் நம்பர், என்ஜின் நம்பர், எரிபொருள் புகை வெளிப்படும் அளவு என அனைத்து விவரங்களும் இடம்பெறும்.

    லைசென்சு மற்றும் ஆர்.சி. புத்தகத்தை எந்த இடத்தில் வைத்து பரிசோதித்தாலும் உடனடியாக தகவல் கிடைக்கும் வகையில் அனைத்து விவரங்களும் அதில் பதிவு செய்யப்பட்டு இருக்கும்.

    எனவே, போலீசாரோ அல்லது போக்குவரத்து துறை அதிகாரிகளோ சோதனையிடும் போது அடுத்த வினாடியே டிரைவிங் லைசென்சு ஆர்.சி. புத்தகம் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

    ஏற்கனவே பழைய டிரைவிங் லைசென்சு, ஆர்.சி. புத்தகம் வைத்திருப்பவர்கள் புதிய முறையில் புதுப்பித்து கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    இது சம்பந்தமான புதிய கார்டுகள் வழங்குவதற்காக கூடுதலாக 18 ரூபயில் இருந்து 20 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும்.

    ஏ.டி.எம். கார்டு வடிவில் இவை இருப்பதால் எங்கு வேண்டுமானாலும் எளிதாக எடுத்து செல்லும் வகையில் அவை அமைந்து இருக்கும். #DrivingLicences #RCBook
    Next Story
    ×