search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்துக்களில் சிக்கி பாதசாரிகள் உயிர் இழப்பதில் தமிழகம் முதலிடம்
    X

    விபத்துக்களில் சிக்கி பாதசாரிகள் உயிர் இழப்பதில் தமிழகம் முதலிடம்

    இருசக்கர வாகனங்களில் செல்வோர் உயிரிழப்பு, பாதசாரிகள் உயிரிழப்பு இரண்டிலுமே இந்தியாவில் தமிழ்நாடு தான் முன்னணி இடத்தில் உள்ளது. #Accident #Tamilnadu
    புதுடெல்லி:

    சாலை விபத்துக்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதால் அதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் அதையும் மீறி சாலை விபத்துக்கள் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளன.

    குறிப்பாக இருசக்கர வாகன விபத்து, சைக்கிள் விபத்து மற்றும் சாலைகளில் நடந்து செல்வோர் விபத்தில் சிக்குவது போன்றவை மிகவும் அதிகமாக உள்ளது.

    கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் 48 ஆயிரத்து 746 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 2014-ம் ஆண்டு இதன் எண்ணிக்கை 40 ஆயிரத்து 950 ஆக இருந்தது. இப்போது இந்த அளவுக்கு அதிகரித்து இருக்கிறது.

    அதேபோல 2014-ல் சாலைகளில் நடந்து செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பது 12 ஆயிரத்து 330 ஆக இருந்தது. அது இப்போது 20 ஆயிரத்து 457 ஆக அதிகரித்துள்ளது. அதாவது 66 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இதன்படி தினமும் 56 பாதசாரிகள் வரை சாலை விபத்தில் சிக்கி உயிரிழக்கிறார்கள்.

    சைக்கிளில் செல்வோர் உயிரிழப்பு சற்று குறைந்துள்ளது. 2014-ல் இதன் எண்ணிக்கை 4 ஆயிரத்து 37 ஆக இருந்தது. இப்போது அது 3 ஆயிரத்து 559 ஆக குறைந்துள்ளது. சைக்கிள் பயன்படுத்துவது குறைந்திருப்பது இதற்கு காரணம் என்று தெரிகிறது.

    இருசக்கர வாகனங்களில் செல்வோர் உயிரிழப்பு, பாதசாரிகள் உயிரிழப்பு இரண்டிலுமே இந்தியாவில் தமிழ்நாடு தான் முன்னணி இடத்தில் உள்ளது.

    தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மட்டும் 6 ஆயிரத்து 329 பேர் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்திருக்கிறார்கள். இதில் 2-வது இடத்தை உத்தரபிரதேசம் பெற்றுள்ளது. அங்கு 5 ஆயரத்து 699 பேர் இறந்துள்ளனர். 3-வது இடத்தை பெற்றுள்ள மராட்டியத்தில் 4 ஆயிரத்து 659 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

    அதேபோல கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 507 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர். இதில் மராட்டியம் 2-வது இடத்தை பிடிக்கிறது. அங்கு 1831 பேரும், 3-வது இடத்தை பிடித்துள்ள ஆந்திராவில் 1379 பேரும் உயிரிழந்திருக்கிறார்கள்.

    பாதசாரிகள் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் சாலை ஆக்கிரமிப்பு தான் என்று தெரியவந்துள்ளது. கடைகள், வாகனங்கள் சாலையோர நடைபாதைகளை ஆக்கிரமித்து இருப்பதால் மக்கள் சாலையில் இறங்கி நடக்க வேண்டியது உள்ளது. அப்போது அவர்கள் அதில் சிக்கி உயிரிழக்கிறார்கள்.

    எனவே சாலையோர பாதைகளை மேம்படுத்துவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய போக்குவரத்து துறை செயலாளர் ஒய்.எஸ். மாலிக் இதுபற்றி கூறும்போது, வளர்ந்து வரும் நாடுகளில் சாலைகளில் நடந்து செல்வோருக்கு உரிய மரியாதை அளிக்காததே இதுபோன்ற விபத்துக்கு காரணம் என்று கூறினார்.

    மற்ற நாடுகளில் ஒப்பிடும் போது, தெற்கிழக்கு ஆசிய நாடுகளில் சாலை விபத்துக்கள் அதிகம் நடப்பதாகவும், குறிப்பாக பாதசாரிகள், இருசக்கர வாகனத்தில் செல்வோர் போன்றோருக்கு உரிய பாதுகாப்பு இல்லாத நிலை இருக்கிறது என்று சர்வதேச சாலை பாதுகாப்பு கூட்டமைப்பின் பிரதிநிதி கபிலா தெரிவித்தார்.

    இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தினமும் 133 பேரும், சைக்கிளில் செல்பவர்களில் தினமும் 10 பேரும் உயிரிழக்கின்றனர். இருசக்கர வாகனங்கள், சைக்கிளில் செல்வோர், பாதசாரிகள் உயிரிழப்பு மொத்த விபத்து உயிரிழப்பில் பாதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. #Accident #Tamilnadu
    Next Story
    ×