search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்க நாற்கர சாலை, பொக்ரான் அணுகுண்டு சோதனை, கார்கில் போர் வாஜ்பாய் சாதித்த 3 முக்கிய சாதனைகள்
    X

    தங்க நாற்கர சாலை, பொக்ரான் அணுகுண்டு சோதனை, கார்கில் போர் வாஜ்பாய் சாதித்த 3 முக்கிய சாதனைகள்

    தங்க நாற்கர சாலை, பொக்ரான் அணுகுண்டு சோதனை மற்றும் கார்கில் போர் ஆகியவை வாஜ்பாய் சாதித்த 3 முக்கிய சாதனைகள் ஆகும். #AtalBihariVajpayee #RIPVajpayee

    புதுடெல்லி:

    “சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு காரில் 6 மணி நேரத்தில் சென்று விட்டோம்” என்று நாம் இப்போது பெருமையாக பேசிக் கொள்கிறோம்.

    இந்த பெருமையை நமக்கு உருவாக்கி கொடுத்தவர் அன்றைய பிரதமர் வாஜ்பாய்.

    அவர் உருவாக்கிய சாலை திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் எக்ஸ்பிரஸ் சாலைகள் அமைக்கப்பட்டன. அவ்வாறு உருவானதுதான் சென்னை- கன்னியாகுமரி 6 வழிச்சாலை.

    இந்த சாலை மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இதே போல் பிரதமர் வாஜ்பாய் சாலைகளை உருவாக்கினார்.

    2001-ம் ஆண்டு அவர் பிரதமராக இருந்த போது இப்படி ஒரு சாலை அமைக்கும் திட்டம் அவரது மனதில் தோன்றியது.

    நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களையும் பிரதான சாலைகள் மூலம் இணைப்பது, இதன் மூலம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் குறுகிய நேரத்துக்குள் இந்த சாலையை சென்றடைய வேண்டும் என்பது அவரது திட்டம்.

    இதற்காக முதலில் தங்க நாற்கர சாலை என்ற திட்டத்தை முதலில் கொண்டு வந்தார்.

    இதன்படி டெல்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, அகமதாபாத் வழியாக மீண்டும் டெல்லி வரை சதுரமாக இணைக்கும் சாலை திட்டத்தை உருவாக்கினார்.

    5 ஆண்டில் முடிக்கும் வகையில் பிரமாண்டமான முறையில் திட்டம் உருவாக்கப்பட்டது. இதற்கு ஏராளமான பொருட் செலவாகும், பணிகளை முடிப்பது கடினம் என நிபுணர்கள் அவரிடம கூறிய போது, அதை எல்லாம் புறந்தள்ளி விட்டு திட்டத்தை முடித்தே தீருவது என்பதில் மிக தீவிரமாக இருந்தார்.

    சுமார் ரூ.60 ஆயிரம் கோடி செலவில் 5846 கி.மீட்டர் தூரத்துக்கு இந்த சாலை அமைக்கப்பட்டது. 5 ஆண்டுகளில் வெற்றிகரமாக இந்த பணிகள் நடந்து முடிந்தது.

    இது மட்டும் அல்லாமல் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களையும் இணைக்கும் வகையில் பிரதான சாலை திட்டத்தையும் உருவாக்கினார்.

    இதன் மூலம் அகமதாபாத், பெங்களூரு, புவனேஸ்வரம், கட்டாக், சூரத், விஜயவாடா, ஆக்ரா, புனே, கான்பூர், உதய்பூர் உள்ளிட்ட 20 நகரங்கள் ஒன்றோடு ஒன்றாக இணைக்கப்பட்டன.


    வாஜ்பாய் உருவாக்கிய இந்த திட்டத்தில் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு இன்று நாடு முழுவதும் விரிவான 4 வழி அல்லது 6 வழி பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதனால் மக்கள் குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்றடைய முடிகிறது. அது மட்டும் அல்ல, சரக்கு போக்குவரத்துகளும் விரைவாக நடக்கின்றன.

    இந்த சாலை திட்டத்தால் இந்தியாவின் பொருளாதாரமும் வெகுவாக முன்னேறி இருக்கிறது.

    இது மட்டும் அல்லாமல் ஒவ்வொரு கிராமத்தையும் அருகில் உள்ள நகரத்தோடு இணைக்கும் வகையில் பிரதம மந்திரி கிராமப்புற சாலை திட்டம் என்ற திட்டத்தை 2000-ம் ஆண்டு தொடங்கினார்.

    கிராம மக்கள் தங்களது விவசாய உற்பத்தி பொருட்களை நகரங்களுக்கு உடனடியாக எடுத்து சென்று விற்று பணம் ஈட்டுவது, இதன் மூலம் இடைத்தரகர்கள் இல்லாத வணிகத்தை செய்வது என்பதற்காகவே இந்த கிராமப்புற சாலை திட்டத்தை அவர் கொண்டு வந்தார்.

    மத்திய அரசின் 60 சதவீத உதவி, மாநில அரசின் 40 சதவீத உதவி என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் மூலம் இன்று நாட்டில் உள்ள ஒவ்வொரு சிறு கிராமமும் அருகில் உள்ள நகரத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.

    இதனால் கிராம பொருளாதார வளர்ச்சி வெகுவாக முன்னேறி இருக்கிறது. சாலை வசதிகள் சரியாக இருந்தால் தான் நாட்டை முன்னேற்ற முடியும் என்று மிக துல்லியமாக திட்டமிட்டு வாஜ்பாய் அன்று கொண்டு வந்த உன்னத திட்டங்கள் இன்று நமக்கெல்லாம் நல்ல பலனை கொடுத்து வருகிறது.

    வாஜ்பாய் பொதுவாக மிக அமைதியான மனிதர். அதிர்ந்து கூட பேச மாட்டார். அதே நேரத்தில் அவர் அபார துணிச்சல் கொண்டவர் என்பதையும் அவருடைய செயல்பாடுகள் நமக்கு காட்டி உள்ளன.

    1998-ம் ஆண்டு மே 11-ந் தேதி இந்தியா பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியது. 1974-ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, முதல் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

    அதன் பிறகு நாம் அதை விட பன்மடங்கு சக்தி கொண்ட அணு ஆயுதங்களை உருவாக்கினோம். ஆனால், இவற்றை சோதனை செய்து பார்ப்பதற்கு நமக்கு பயம்.

    ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்து விடும். பாகிஸ்தான், சீனா போன்றவை நம் மீது கோபம் கொண்டு போர் தொடுத்து விடலாம் என்ற பயம் தான் இதற்கெல்லாம் காரணமாக இருந்தது.

    இதனால் மீண்டும் அணுகுண்டு சோதனை திட்டத்தை எந்த பிரதமரும் கையில் எடுக்கவில்லை. ஆனால், வாஜ்பாய் பிரதமராக வந்ததும் பொக்ரானில் சக்திவாய்ந்த அணு குண்டுகளை வெடித்து இந்தியாவின் மாபெரும் சக்தியை வெளி உலகுக்கு எடுத்து காட்டினார்.

    இதனால் பீதியில் அலறிய பாகிஸ்தானும் கூட பதிலுக்கு சில அணுகுண்டுகளை வெடித்து பூச்சாண்டி காட்டியது.

    நாம் எதிர்பார்த்தது போலவே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்தன. ஆனால், எந்த பொருளாதார தடையும் நம்முடைய துரும்பை கூட அசைத்து பார்க்க முடிய வில்லை.

    பொருளாதார ரீதியாக நாம் தொடர்ந்து வெற்றி பாதையில் பயணம் செய்தோம். இதற்கெல்லாம் வாஜ்பாய்தான் அன்று காரணமாக இருந்தார்.

    இந்தியா பொருளாதாரத்தில் மிகப்பெரும் வளர்ச்சி அடைந்து தன்னிறைவு பெறும் நாடாக மாறியதை கண்டு வயிற்றெரிச்சல் அடைந்த பாகிஸ்தானும், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளும் இந்தியாவை சீர்குலைக்க திட்டமிட்டனர். அதன் ஒரு பகுதியாகதான் 1999-ம் ஆண்டு இந்தியாவின் கார்கில் பகுதிக்குள் பாகிஸ்தான் ஊடுருவியது.

    பிரதமர் வாஜ்பாய் பாகிஸ்தான் ராணுவத்தை பின்வாங்கி செல்லும்படி முதலில் அன்பாக கேட்டார். ஆனால் பாகிஸ்தான் மறுத்ததும் வாஜ்பாய் ஒரு வினாடி கூட யோசிக்கவில்லை. அடுத்த நிமிடமே கார்கில் போரை அறிவித்தார். இந்திய ராணுவ படைகளை ஊக்குவித்து அதிரடி உத்தரவிட்டார்.

    வாஜ்பாய் இப்படி ஒரு அதிரடியை மேற்கொள்வார் பாகிஸ்தானும், பயங்கரவாதிகளும் எதிர்பார்க்கவில்லை. முதலில் அவர்கள் இந்திய ராணுவத்தை வீழ்த்தி விடலாம் என்று நினைத்தனர். ஆனால் வாஜ்பாய் பாகிஸ்தானுக்கு சிறு கடுகளவுக்கு கூட இடம் கொடுக்கவில்லை.

    பாகிஸ்தான் ராணுவத்தை ஓட ஓட விரட்டி அடித்தார். தோல்வி உறுதி என தெரிந்ததும் பாகிஸ்தான் அரசு அமெரிக்காவிடம் உதவி கேட்டு கெஞ்சியது. ஆனால் இந்தியா பக்கம் இருந்த நியாயத்தை உணர்ந்த அமெரிக்கா உதவி செய்யவில்லை. கடைசியில் பாகிஸ்தான் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு இந்தியாவிடம் மண்டியிட்டது.

    இந்த மகத்தான சாதனையை செய்த மாமனிதர் வாஜ்பாய் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×