search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக அரசு பஸ்களில் கோழிகளுக்கு அரை கட்டணம் டிக்கெட்
    X

    கர்நாடக அரசு பஸ்களில் கோழிகளுக்கு அரை கட்டணம் டிக்கெட்

    கர்நாடகா அரசு போக்குவரத்து பஸ்சில் கோழிக்கு அரை கட்டணம் வசூலித்த கண்டக்டரிடம் விவசாயி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
    பெங்களூர்:

    பஸ்களில் பயணிகளுடன் கோழிகள், ஆடுகள், நாய்கள் போன்றவை பயணம் செய்ய அனுமதிப்பதில்லை. ஆனால் கர்நாடக மாநில அரசு பஸ்களில் அவை பயணம் செய்ய அனுமதிப்பதுடன் அவற்றுக்கு டிக்கெட் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

    கர்நாடக மாநிலம் சிகாபலாபுரா மாவட்டத்தில் உள்ள பெட்டனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். விவசாயி ஆன இவர் கவுரிபிதானூரில் இருந்து பெட்டனஹள்ளிக்கு காலை 7.10 மணியளவில் அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார்.

    அப்போது தன்னுடன் 2 கோழிகளை எடுத்து சென்றார். அவற்றை தலா 150 ரூபாய்க்கு வாங்கி இருந்தார். பஸ்சில் அவரிடம் கண்டக்டர் டிக்கெட்டுக்கு பணம் கேட்டார்.

    அவர் தன்னிடம் இருந்த 50 ரூபாயை கொடுத்தார். கவுரிபிதானூரில் இருந்து பெட்டனஹள்ளிக்கு செல்ல ரூ.26 டிக்கெட் கட்டணம். எனவே கண்டக்டர் மீதம் ரூ.24 தருவார் என அவர் எதிர்பார்த்தார். ஆனால் அவர் 2 ரூபாய் மட்டுமே வழங்கினார்.

    இதனால் ஒன்றும் புரியாத அவர் இது குறித்து கண்டக்டரிடம் கேட்டார். அதற்கு அவர் தலா அரை டிக்கெட் வீதம் ரூ.24 வசூலித்து இருப்பதாக கூறினார். அவரது பதில் புரியாத விவசாயி ஸ்ரீனிவாஸ் நான் மட்டும்தானே பயணம் செய்கிறேன்.

    என்னுடன் குழந்தைகள் யாரும் பயணம் செய்யவில்லையே என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கண்டக்டர், கோழிகளுக்கு தலா அரை டிக்கெட் வீதம் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீனிவாஸ் கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பஸ்சில் 6 முதல் 12 வயது வரை பயணம் செய்யும் குழந்தைகளுக்கு அரை டிக் கெட்கட்டணம் வசூலிக்கப்படும்.

    அவர்கள் 23 முதல் 30 கிலோ எடை இருப்பார்கள். ஆனால் கோழி தலா 2½ கிலோ எடை மட்டுமே உள்ளது. அவற்றை நான் இருக்கையில் அமர வைக்கவில்லை. அப்படியிருக்க 30 நிமிட நேர பயண தூரத்துக்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமா? என ஆதங்கப்பட்டார்.

    ஆனால் கர்நாடக அரசு பஸ் நிர்வாகம் கோழி, நாய், ஆடு போன்ற வீட்டு வளர்ப்பு பறவைகள் மற்றும் பிராணிகளுக்கு அரை டிக்கெட் கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளதாக கூறினார். இத்தகவல் கர்நாடக அரசு பஸ் இணைய தளத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அதில் முயல்கள், நாய்கள், பூனைகள், பறவைகள் மற்றும் கூண்டுகளில் அடைத்து பஸ்களில் எடுத்து வரும் வளர்ப்பு பிராணிகளுக்கு தலா அரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    அது குறித்து கவுரி பிதானூர் அரசு பஸ் டெப்போ மேலாளர் ஏ.யூ. ‌ஷரிப்பீடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் போக்குவரத்து கழக சட்டப்படிதான் விவசாயி ஸ்ரீனிவாசிடம் கோழிகளுக்கு டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.
    Next Story
    ×