search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமரின் அதிர்ஷ்ட குலுக்கலில் என்ஜினீயரிங் மாணவிக்கு ரூ.1 கோடி பரிசு
    X

    பிரதமரின் அதிர்ஷ்ட குலுக்கலில் என்ஜினீயரிங் மாணவிக்கு ரூ.1 கோடி பரிசு

    பிரதமரின் அதிர்ஷ்ட குலுக்கலில் மராட்டியத்தை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவிக்கு ரூ.1 கோடி பரிசு கிடைத்தது.

    நாடு முழுவதும் வர்த்தக நிறுவனங்களில் மின்னணு முறையில் பணப் பரிமாற்றம் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பிரதமர் மோடி ‘லக்கி கிரஹக் யோஜ்னா’ என்ற பரிசுத் திட்டத்தை அறிவித்து இருந்தார். இதேபோல் வர்த்தக நிறுவனங்களுக்கு ‘டிஜிதன் வியாபார் யோஜ்னா’ என்னும் பரிசு குலுக்கல் அறிவிக்கப்பட்டது.

    இதில் வாடிக்கையாளர் பிரிவில் மராட்டிய மாநிலம் லட்டூர் நகரைச் சேர்ந்த மாணவி ஸ்ரதா மெங்சீத்தேவுக்கு ரூ.1 கோடி பரிசு கிடைத்தது.

    இவர், மாதாந்திர தவணை முறையில் செல்போன் வாங்குவதற்காக ரூபே கார்டை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் ரூ.1,590 செலுத்தி இருந்தார். அதுவே, தற்போது அவருக்கு பெரும் அதிர்ஷ்டத்தை தேடித் தந்து இருக்கிறது. ஸ்ரதா மெங்சீத்தே புனே நகரில் ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு எலக்டீரிக்கல் என்ஜினீயரிங் படித்து வருகிறார்.

    மளிகைக் கடை வியாபாரியின் மகளான அவர் நிருபர்களிடம் கூறுகையில், “எனக்கு கிடைத்த பரிசுத் தொகையை என்ன செய்வது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. முதலில் எனது படிப்பை முடிக்கவேண்டும். எனவே அதில்தான் எனது கவனம் இருக்கும்” என்றார்.



    2-வது பரிசான ரூ.50 லட்சம் குஜராத் மாநிலம் காம்பாய் என்னும் இடத்தைச் சேர்ந்த தொடக்க பள்ளிக்கூட ஆசிரியர் ஹர்திக் குமாரும், மூன்றாம் பரிசான ரூ.25 லட்சம் உத்தரகாண்ட் மாநிலம் ஷெர்பூர் கிராமத்தை சேர்ந்த பாரத் சிங் என்பவரும் பெற்றனர்.

    இதேபோல் வர்த்தக நிறுவனங்களுக்கான ‘டிஜிதன் வியாபார் யோஜ்னா’ பிரிவில் முதல் பரிசான ரூ.50 லட்சம் சென்னை தாம்பரத்தில் உள்ள ‘ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ்’ அதிபர் ஆனந்த் அனந்தபத்மநாபனுக்கு கிடைத்தது. ரூ.300 க்கான மின்னணு பணப் பரிமாற்றத்தை ஏற்றுக் கொண்டதற்காக குலுக்கலில் அவர் இடம்பெற்றிருந்தார்.

    அப்போது, ஆனந்த் அனந்தபத்மநாபன் தனக்கு கிடைத்த பரிசை உடனடியாக தூய்மை கங்கை திட்டத்துக்கு வழங்குவதாக அறிவித்தார். இதை பார்வையாளர்கள் கைதட்டி வரவேற்றனர்.

    2-வது பரிசான ரூ.25 லட்சம் மராட்டிய மாநிலம் தானே நகரில் சிறிய அளவில் பியூட்டி பார்லர் நடத்தி வரும், ராகினி ராஜேந்திர உத்தேகாருக்கும், 3-வது பரிசான ரூ.12 லட்சம் தெலுங்கானா மாநிலம், அமீர்பேட்டையில் துணிக்கடை நடத்தி வரும் 33 வயது ஷேக் ரபிக்கிற்கும் கிடைத்தது. 
    Next Story
    ×